உலகம் முழுவதையும் பெரும் எதிர்பார்ப்பில் ஆழ்த்தியிருந்த ஆப்பிள் ஐபோன் 14 சீரிஸ் சமீபத்தில் வெளியானது. ஆனால், அந்த எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ததா என்பது மில்லியன் டாலர் கேள்விதான்.
ஐபோன் 14க்கும் ஐபோன் 13க்கும் இடையில் பெரிய வித்தியாசம் இல்லாததால் பயனர்கள் சற்று ஏமாற்றமடைந்து விட்டார்கள். ஆனால், அந்த சோகத்தை ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் ப்ரோ மேக்ஸ் ஆகியவை கொஞ்சம் அதன் புதிய அம்சங்களால் போக்கியது. இருப்பினும் அதன் விலை முன்பை விட இந்த முறை அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
போன முறை வெளியான ஐபோன் 13 மினியை விட குறைவான ப்ரீ-புக்கிங் ஆர்டர்களையே பெற்றுள்ளன ஆப்பிள் ஐபோன் 14 மற்றும் 14 ப்ளஸ் ஆகியவை. நிலைமை இப்படியிருக்க அதற்குள் ஐபோன் 15 குறித்தான அப்டேட்டுகள் இணையத்தை ஆக்கிரமிக்க தொடங்கி விட்டன.
ஆப்பிள் ஐபோன்கள் குறித்து முன்கணிப்பதில் வல்லுனரான மிங் சி குவோ மற்றும் மார்க் குர்மான் ஆகியோர் ஆப்பிள் ஐபோன் 15 குறித்து ஒரு சில அப்டேட்களை கொடுத்துள்ளனர். ஆப்பிள் தனது அடுத்த ஐபோன் 15இல் குறிப்பிடத்தகுந்த மாற்றங்களை செய்ய இருப்பதாக இருவரும் கூறியுள்ளனர்.
குறிப்பாக ஆப்பிள் தனது ப்ரோ மாடல் மொபைல்களின் பெயர் உட்பட மாற்ற உள்ளதாகவும் , மேலும் அடிப்படை மாடலுக்கும் பிரீமியம் மாடலுக்கும் இடையிலான வேறுபாடுகளை அதிகரிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, ஐபோன் 15இல் வரும் அடிப்படை மாடல்களை விட, அதன் ப்ரோ மாடல்களின் மீதும் அதன் அம்சங்கள் மீதும் ஆப்பிள் நிறுவனம் அதிக கவனம் செலுத்த உள்ளதாக தெரிகிறது.
மேலும் வல்லுனர்களின் கருத்துப்படி ஆப்பிள் தனது ப்ரோ மாடல் மொபைல்களின் பெயர்களை மாற்றிவிட்டு அல்ட்ரா என்று கொண்டு வரலாம் என்றும் கூறுகின்றனர். ஏற்கனவே தனது வாட்ச் சீரிஸில் அந்த பெயரை ஆப்பிள் நிறுவனம் பயன்படுத்தியுள்ளதால் அடுத்த ஜெனரேஷன் மொபைலிலும் இந்த பெயரை கொண்டு வர வாய்ப்புள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஆப்பிள் ஐபோன் 14இல் அவர்கள் விட்டதை ஆப்பிள் ஐபோன் 15 மூலம் பிடிப்பதற்காக ஆப்பிள் நிறுவனம் பெரிய அம்சங்களை உட்புகுத்தலாம் என்றும் கணித்துள்ளனர். எது எப்படியோ இனி அடுத்த மாடல் ஆப்பிள் மொபைல் வருவதற்குள் இன்னும் இதை விட அதிகமான அப்டேட்களை நீங்கள் பெற வாய்ப்புள்ளது. எனவே தொடர்ந்து எங்களோடு இணைந்திருங்கள்.