Mobile Explosion: மொபைல் வெடித்து 8 மாத குழந்தை பலி

உத்திரபிரதேசத்தில் உள்ள பரேலி மாவட்டத்தில் சார்ஜ் ஆகி கொண்டிருந்த மொபைல் போன் வெடித்து எட்டு மாதங்களே ஆன குழந்தை பலியாகியுள்ள சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

கட்டுமான வேலை செய்து வரும் தம்பதியரின் மகளான எட்டு மாத குழந்தை நேஹா சம்பவம் நடக்கும்போது வீட்டிற்குள் உறங்கி கொண்டிருந்துள்ளார். இவர்கள் வசிப்பது கட்டுமான பணி நடைபெறும் இடத்தில் உள்ள மின்சாரம் கூட இல்லாத வீடு என்பதால் சோலார் பவர் மூலமே மொபைலை சார்ஜில் போட்டு வைத்துள்ளனர்.

இந்த மொபைல் ஆறு மாதத்திற்கு முன்பு வாங்கிய ஒரு கீபேட் மொபைல் தான். ஆனால், முறையான அடாப்டர் எதுவும் இல்லாமல் வெறும் usb கேபிள் வழியாக நேராக சோலார் மின்சாரத்தில் இணைத்து சார்ஜ் போட்டு வைத்துள்ளனர். இதனால் அதிக சூடான மொபைல் பெரும் சத்தத்துடன் வெடித்துள்ளது.

அப்போது குழந்தை நேஹா படுத்திருந்த படுக்கைகளும் எரிந்து குழந்தைக்கு அதிகமான தீக்காயங்கள் பட்டுள்ளன. அங்கே இருந்த குழந்தையின் சகோதரி நந்தினி கத்தி கூச்சலிட வெளியில் இருந்து ஓடி வந்த தாய் குசும் காஷ்யப் குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.

ஆனால், சிகிச்சை பலனின்றி குழந்தை இறந்து விட்டது. இது குறித்து பேசிய காவல்துறை இது முழுக்க முழுக்க பெற்றோர்களின் அலட்சியத்தால் நடந்துள்ளது என கருத்து தெரிவித்துள்ளனர்.

முறையான உபகரணங்கள் இல்லாமல் மொபைலை சார்ஜ் செய்வதோ, அல்லது தெளிவாக தெரியாமல் குறைபாடுள்ள மொபைல்களை பயன்படுத்துவதை தவிர்த்தால் மட்டுமே இது போன்ற தேவையற்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க முடியும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.