Mobile Explosion : வெடிகுண்டை போல மொபைல் போன் வெடிக்க காரணம் என்ன?

என்னதான் மொபைல் நிறுவனங்கள் மேம்பட்ட கூலிங் சிஸ்டமை நமது மொபைலில் பொருத்தியிருந்தாலும் பல்வேறு காரணங்களால் மொபைல் சூடாவதை தடுக்க முடியாது. ஆனால், அவற்றை குறைத்து பாதுகாப்பாக இருக்க முடியும்.

பேட்டரி

மொபைல் வெடிப்பதற்கு முதன்மையான காரணம் பேட்டரி வீங்கி வெடிப்பதுதான். இது பல காரணங்களால் ஏற்படுகிறது. ஓவர் சார்ஜிங் , பழைய பேட்டரி, மலிவான மற்றும் தரமற்ற பேட்டரிகளினால் இது நடைபெறுகிறது.

எனவே, உங்கள் மொபைலில் உள்ள பேட்டரி வீங்குவது போன்றோ அல்லது உங்களது மொபைலின் வடிவம் வீங்குவது போன்றோ இருந்தால் உடனே அதை பாதுகாப்பான முறையில் அப்புற படுத்தி விட வேண்டும்..

சேதமான டிவைஸ்கள்

உங்கள் மொபைல் உடைந்திருந்தாலோ அல்லது தண்ணீர் போன்ற திரவங்கள் உட்புகும் அளவிற்கு அதில் சேதாரம் இருந்தாலோ அதை பயன்படுத்தாதீர்கள். அதன் வழியாக நீர் அல்லது வேறு ஏதாவது உள்ளே சென்று பாகங்களை பாதித்து இது போன்ற பிரச்சனைகளுக்கு வழி வகுக்கும்.

தரமற்ற சார்ஜர்கள்

தரமற்ற அல்லது மலிவான சார்ஜர்களை உங்கள் மொபைலுக்கு பயன்படுத்தாதீர்கள். எப்போதும் உங்கள் மொபைல் நிறுவனத்தின் ஒரிஜினல் சார்ஜர்களை மட்டும் பயன்படுத்துங்கள். இந்த மலிவான அல்லது அதிக மின்சாரத்தை இழுக்கும் சார்ஜர்கள் பேட்டரியை சுலபமாக வீணாக்கி விடும்.

அதே போல் வேறு நிறுவன அடாப்டரை பயன்படுத்துவது, அல்லது தரமற்ற மலிவான சார்ஜிங் கேபிள்களை பயன்படுத்துவது போன்ற பழக்கங்களை பின்பற்றாதீர்கள்.

சேதமான கேபிள்கள்

சேதமான கேபிள்கள் அல்லது வயர் விட்டு போயிருக்கும் சார்ஜிங் கேபிள்களை பயன்படுத்தாதீர்கள். அது உங்கள் போன் பேட்டரிக்கும் ஆபத்து. மேலும் தீவிபத்துகளை ஏற்படுத்தும் வாய்ப்புகளும் அதிகம். அதே போல் எப்போதும் சார்ஜ் போட்டு முடிந்ததும் கேபிளை மற்றும் கழற்றி வைக்காமல், சார்ஜிங் அடாப்டரையும் சேர்த்து பவர் பாயிண்டிலிருந்து கழற்றி வைக்கவும்.

போலி பேட்டரிகள்

உங்கள் நிறுவனம் கொடுக்கிற பேட்டரியை தவிர வேறு எந்த தரமற்ற மலிவான மற்றும் மற்ற நிறுவனங்களின் பேட்டரிகளையும் பயன்படுத்த கூடாது.

கார் சார்ஜிங் கேபிள்

நீங்கள் பயணங்களில் இருக்கும்போது உங்களது காரில் உள்ள சார்ஜிங் வசதி மற்றும் கேபிளை பயன்படுத்தி சார்ஜ் போடுவதற்கு பதிலாக பவர் பேங்க்குகளை பயன்படுத்துங்கள். இந்தியாவில் ஓடும் கார்களில் பயன்படுத்தப்படும் இது போன்ற சார்ஜிங் அம்சங்கள் பெரும்பான்மையாக தரமற்றதாகவும் மலிவானதாகவும் உள்ளன.

அதிக நேர சார்ஜிங்.

நம்மில் பலரும் இரவு போனை சார்ஜில் போட்டு விட்டு காலை வரை அப்படியே விட்டு விடுவோம். இதனால் அதிகமான மின்சாரம் கடத்தப்பட்டு மொபைல் பேட்டரி பாதிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன. இது ஆதாரபூர்வமாக இன்னும் நிரூபிக்கப்படவில்லை என்றாலும் ஓவர்நைட் சார்ஜிங் கண்டிப்பாக பேட்டரி மற்றும் நமக்கும் ஆபத்து.

புறச்சூழல்

மொபைல் பேட்டரிகள் குறிப்பிட்ட வெப்பநிலையை மட்டுமே தாங்குமளவுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளன. அதை விட அதிகமான வெப்பநிலையில் அதிக நேரம் மொபைல் இருந்தால் மொபைலின் பேட்டரி பாதிக்கப்படும். குறிப்பாக நேரடியாக சூரியவெளிச்சம், காருக்குள் வெகுநேரம் என இருந்தால் மொபைல் பேட்டரி பாதிக்கப்படும். எனவே எப்போதும் 32-95 என்ற ஃபாரன்ஹீட் வெப்பநிலைக்குள் மொபைலை வைத்து கொள்ள வேண்டும்.

இதர பவர் ஜங்சன் பாக்ஸ்கள்

தற்போதெல்லாம் விதவிதமான பவர் ஜங்ஷன் பாக்ஸுகள் வந்து விட்டன. குறிப்பாக நேரடியாக அதிலேயே USB கேபிளை சொருகி சார்ஜ் போட்டுக் கொள்ளும் ஆப்ஷன்கள் கூட வந்து விட்டன. ஆனால், அது போன்று செய்வதால் குறைந்த மின்னழுத்தம் ஏற்பட்டு பேட்டரி பாதிக்கப்படும்.

போன் பராமரிப்பு மற்றும் பயன்பாடுகள்

உங்கள் போனுக்கென்று குறிப்பிட்ட சிப்செட் தான் கொடுக்கப்பட்டிருக்கும். அதன் தன்மையை பொறுத்தே அதன் செயல்பாடும் அமையும். நாம் மல்டிடாஸ்கிங் மற்றும் இடைவிடாத ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடி அதிகமான சுமையை போன் மீது ஏற்றுவதால் அது பேட்டரி மற்றும் சிப்செட்டையும் பாதிக்கும்.

மேலும், சேதமடையும் மொபைல் போன்களை அதற்குரிய நிறுவனத்தின் சேவை மையங்களில் சரி செய்ய கொடுப்பதே நல்லது. லோக்கல் கடைகளில் கொடுக்கும்போது அங்கு பயன்படுத்தப்படும் உதிரி பாகங்களின் தரம் நம்பகத்தன்மை நிறைந்ததாக இருக்காது.

மேற்கண்ட காரணங்களால் தான் பெரும்பான்மையாக மொபைல் பேட்டரி உட்பட ஒட்டுமொத்த பாகங்களும் விரைவில் பழுதாகி வெடிக்கும் நிலைக்கு செல்கிறது என்பதை மனதில் கொண்டு பயனாளர்கள் செயல்படவேண்டும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.