நாகர்கோவில்: அண்ணா பிறந்தநாளையொட்டி இன்று பள்ளி மாணவ, மாணவிகளுக்கான சைக்கிள் போட்டி நடந்தது. அண்ணா பிறந்தநாளையொட்டி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை சார்பில் மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள் போட்டி நடந்தது. போட்டிகள் 13, 15, 17 வயது என மூன்று பிரிவுகளில் நடந்தது. இதில் மாணவிகளுக்கு 10 கிலோ மீட்டரும், மாணவர்களுக்கு 15 கிலோ மீட்டரும் தூரம் வழங்கப்பட்டு இருந்தது. போட்டிகள் நாகர்கோவில் தேரேகால்புதூரில் தொடங்கியது. போட்டியை நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் துணை மேயர் மேரிபிரின்ஸ் லதா, நாகர்கோவில் கல்வி மாவட்ட அதிகாரி பிரின்ஸ் ஆரோக்கியராஜ் திமுக மாநகர செயலாளர் ஆனந்த், ஒன்றிய செயலாளர் மதியழகன், மாநகர அவைத்தலைவர் பன்னீர்செல்வம், துணை செயலாளர் வேல்முருகன், தேரேகால்புதூர் ஊராட்சி தலைவர் சோமு, நிர்வாகி சி.டி.சுரேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர். இந்த ஒவ்வொரு பிரிவிலும் முதல் பரிசு பெற்றவர்களுக்கு ரூ.5 ஆயிரம், 2ம் பரிசு பெற்றவர்களுக்கு ரூ.3 ஆயிரம், 3ம் பரிசு பெற்றவர்களுக்கு ரூ.2 ஆயிரம் மற்றும் ஒவ்வொரு பிரிவிலும் 7 பேருக்கு தலா ரூ.250 வீதம் பரிசு வழங்கப்பட்டது. பரிசுகளை மேயர் மகேஷ் வழங்கினார்.