கேரளாவைச் சேர்ந்த ஸ்ரீலட்சுமி, ஆந்திராவைச் சேர்ந்த லாவண்யா ஆகிய இருவரும் சென்னை நாவலூரில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றிவந்தனர். இவர்கள் நேற்று இரவு பணியை முடித்துவிட்டு தாங்கள் தங்கியிருந்த இடத்துக்குத் திரும்பிக்கொண்டிருந்தார்கள். இரவு 11 மணியளவில் ஓ.எம்.ஆரில் சாலையைக் கடக்க முற்படும்போது, சாலையில் அதிவேகத்தில் தாறுமாறாக வந்த கார் ஒன்று இருவர்மீதும் மோதியது.
கார் மோதியதில் இரண்டு இளம்பெண்களுக்குத் தலை உள்ளிட்ட பல இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர், இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸில் ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஸ்ரீலட்சுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த லாவண்யா சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
இந்த கோர விபத்து ஏற்படுத்திய காரை சென்னையைச் சேர்ந்த மோதிஷ் குமார் என்ற இளைஞர் ஓட்டிவந்தார். அவர் அதீத மது போதையில் வாகனத்தை இயக்கியது தெரியவந்தது. விபத்து தொடர்பாக, மோதிஷ் குமாரைக் கைதுசெய்து, பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு காவல்துறையினர் விசாரணை நடத்திவருகிறார்கள். வெளிமாநிலத்திலிருந்து சென்னை வந்து தங்கி வேலைப்பார்த்த இளம்பெண்கள் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.