புதுடில்லி, : அமேசானில், அயர்ன் பாக்ஸ் ஆர்டர் செய்து, பொருளுக்குப் பதிலாக அதிர்ச்சியை வாங்கியிருக்கிறார், பிரதமரின் பொருளாதார ஆலோசகர் பிபேக் தேப்ராய்.பிரதமருக்கான பொருளாதார ஆலோசனை கவுன்சிலின் தலைவராக உள்ளார் பிபேக் தேப்ராய். இவர் அமேசானில் ‘பிலிப்ஸ்’ அயர்ன் பாக்ஸ் ஒன்றை வாங்க விரும்பி, ஆன்லைனில் ஆர்டர்
செய்துள்ளார். குறிப்பிட்ட நாளில் பொருளும் டெலிவரி செய்யப்பட்டது.
ஆனால், பார்சலை பிரித்துப் பார்த்தவருக்கு அதிர்ச்சி. அதில் அயர்ன் பாக்ஸ் இருக்கும் என எதிர்பார்த்தால், பதிலுக்கு ஒரு பிரஷ் இருந்துள்ளது. அத்துடன் சங்கு மாதிரியான ஒரு பொருளும் இருந்துள்ளது.இது போன்ற அனுபவம் பலருக்கும் ஏற்பட்டிருக்கும் என்றாலும், பிரதமரின் பொருளாதார ஆலோசகருக்கு ஏற்படவும், அது பேசுபொருளாகி இருக்கிறது.
இது குறித்து, பிபேக் தேப்ராய் டுவிட்டரில் தெரிவித்து உள்ளதாவது:மற்றவர்களுக்கு நடக்கும்போது நாம் வேடிக்கையாக எழுதுவோம். இப்போது அது எனக்கு நடந்துள்ளது. அமேசானில் ஒரு பிலிப்ஸ் அயர்ன் பாக்ஸ் ஆர்டர் செய்தேன். ஆனால், உள்ளே அயர்ன் பாக்ஸ் இல்லை. அதற்குப் பதிலாக, என்னவென்றே தெரியாத, சங்கின் மேலோடு போன்ற ஒரு பொருளும், கூடவே ஒரு பிரஷூம் இருந்தது.
இதனால் நிறுவனத்தின் நற்பெயர் பாதிக்கப்படுகிறது. சேவையில் இன்னும் தேர்ச்சி அடையவில்லை.இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.இதையடுத்து, அமேசான் உடனடியாக பதிலளித்துள்ளது. அதில், இதை உடனடியாக சரிபார்ப்பதாகவும், அமேசான் குழுவினர் அவருக்கு உதவுவார்கள் என்றும்
பதிலளித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement