ஒட்டாவா: கனடாவை சேர்ந்த தம்பதியின் 3 குழந்தைகள் ‛ரெட்டினிடிஸ் பிக்மென்டோசா’ எனும் மரபணு சார்ந்த கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். விரைவில் அவர்கள் முழுவதுமாக கண்பார்வை இழக்கலாம் என டாக்டர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் தான் 3 குழந்தைகளுக்கும் உலகத்தை சுற்றிக்காட்ட அவரது தம்பதி திட்டமிட்டு பல இடங்களுக்கு அழைத்து செல்லும் நெகிழ்ச்சி சம்பவம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
உலகில் எத்தனை உறவுகள் இருந்தாலும் தாய்-தந்தை உறவு தான் மிகவும் முக்கியமானது முதன்மையானது. குழந்தைகள் மீது பலபேர் அன்பு செலுத்தினாலும் கூட அது தாய்-தந்தையின் அன்புக்கு ஈடாகாது. ஏனென்றால் பெற்ற குழந்தைகளுக்காக அனைத்து விஷயங்களையும் தியாகம் செய்யும் குணம் என்பது தாய்-தந்தைக்கு மட்டுமே உள்ளது.
அந்த வகையில் தான் கனடாவில் 4 குழந்தைகளை பெற்றேடுத்த தம்பதியின் 3 குழந்தைகள் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் கண்பார்வை விரைவில் முழுமையாக பறிபோகும் என டாக்டர்கள் கூறிய நிலையில் அதற்கு முன்பே குழந்தைகளுக்கு உலகை சுற்றிக்காட்ட அந்த தம்பதி முயற்சித்துள்ளனர். அதுபற்றிய விபரம் வருமாறு:
கனடா தம்பதி
கனடாவை சேர்ந்தவர் செபாஸ்டியன் பெல்டேட்டியர். இவர் நிதித்துறையில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அடித் லேமே. இவர் ஹெல்த்கேர் லாஜிஸ்டிக் சார்ந்த பணி செய்து வருகிறார். இவர்களுக்கு 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு மியா என்ற மகள் உள்ளார். மேலும் லியா, கோலின், லாரண்ட் என 3 மகன்கள் உள்ளனர்.
அரியவகை நோயால் மகள் பாதிப்பு
இந்நிலையில் தான் 3வது நிரம்பிய நிலையில் மியாவுக்கு கண்ணில் குறைபாடு ஏற்பட்டது. இதையடுத்து தம்பதி அவரை கண் டாக்டரிடம் அழைத்து சென்றனர். அவருக்கு மருத்துவ சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின்போது அவரது மகள் மியா ‛ரெட்டினிடிஸ் பிக்மென்டோசா’ எனும் நோயால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. அரிய மரபணு சார்ந்த நேயாக உள்ள இதனை குணப்படுத்த முடியாது என டாக்டர்கள் தெரிவித்தனர். அதோடு தொடர்ந்து கண்ணின் வெள்ளை படலம் பாதிக்கப்பட்டு பார்வை குறைந்து முற்றிலும் பார்வை இழப்பு ஏற்படலாம் என டாக்டர்கள் தெரிவித்தனர்.
2 மகன்களும் பாதிப்பு
இதனை கேட்டு அந்த தம்பதி அதிர்ச்சியடைந்தனர். இந்த அதிர்ச்சியில் இருந்து அவர்கள் மீண்டு வருவதற்குள் அவர்களின் மகன்களான 7 வயது நிரம்பிய கோலின், 5 வயது நிரம்பிய லாரண்ட் ஆகியோருக்கும் மியாவை பாதித்த கண்சார்ந்த மரபணு நோயின் அறிகுறி தென்பட்டது. இவர்களையும் டாக்டர்களிடம் அழைத்து சென்று பரிசோத்தனர். அப்போது மியாவை போல் அவர்கள் 2 பேரும் கண்சார்ந்த மரபணு நோயால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. மேலும் தங்களின் இன்னொரு மகனான 9 வயது நிரம்பிய லியோவுக்கு அவர்கள் சோதனை செய்தனர். அதிர்ஷ்டவசமாக அவருக்கு பாதிப்பு இல்லை.
உலகை சுற்றும் குடும்பம்
ஒரே குடும்பத்தில் 3 குழந்தைகள் இத்தகைய அரிய கண்சார்ந்த நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதை அறிந்து பெற்றோர் மிகவும் மனவருத்தம் அடைந்தனர். மேலும் அவர்களின் இளமை காலத்தில் 3 பேரும் கண்பார்வையை இழக்கலாம் என டாக்டர்கள் எச்சரிக்கை விடுத்தனர். இதனால் கண்பார்வை இருக்கும் போதே தங்களின் குழந்தைகளுக்கு உலகை சுற்றிக்காட்ட அந்த தம்பதி விரும்பி உள்ளனர். அதன்படி தற்போது அவர்கள் அனைவரும் இணைந்து உலகம் முழுவதும் சுற்றுலா சென்று வருகின்றனர். கடந்த மார்ச் மாதம் இவர்கள் தங்கள் பயணத்தை தொடங்கினார்கள். நமீபியா உள்பட பல நாடுகளுக்கு இதுவரை அவர்கள் சுற்றுலா சென்றுள்ளனர்.
இந்தியா வரவும் திட்டம்
திருமணத்துக்கு முன்பு கணவர்-மனைவி இருவரும் ஒன்றாக அடிக்கடி பல்வேறு பயணங்கள் செய்தனர். இதனால் அவர்கள் தற்போது திங்களின் குழந்தைகளும் பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். விரைவில் அவர்கள் இந்தோனேசியா செல்ல உள்ளனர். மேலும் ரஷ்யா, சீனா, இந்தியாவிற்கு வரவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர். அவர்கள்
தம்பதி கூறுவது என்ன?
இதுபற்றி செபாஸ்டியன் பெல்டேட்டியர்- அடித் லேமே தம்பதி கூறுகையில், ‛‛நாங்கள் 2020 முதல் பயணத்தை துவங்க திட்டமிட்டோம். ரஷ்யாவில் இருந்து நிலம் வழியாக சீனா உள்பட பல நாடுகள் செல்ல திட்டமிட்டுள்ளோம். ஆனால் கொரோனா பாதிப்பால் இது தடைப்பட்டது. தற்போது பயணம் செய்து வருகிறோம். இந்த பாதிப்பை உண்மையில் எதுவும் செய்ய முடியாது. இது எவ்வளவு வேகமாக பார்வையை பறிக்கும் என்பது எங்களுக்கு தெரியாது. ஆனால் எங்களின் குழந்தைகள் தங்களின் நடுத்தர வயதில் பார்வையை இழக்கலாம் என நினைக்கிறோம். இதனால் அதற்கு முன்பு உலகை சுற்றிக்காட்ட விரும்புகிறோம். எங்களால் முடிந்தவரை அவர்களுக்கு உலகத்தை சுற்றிக்காட்ட விரும்புகிறோம். எங்களுக்கு எங்கள் நிறுவனமும் உதவி செய்து வருகின்றன. இந்த பயணத்தின் மூலம் எங்களின் குழந்தைகள் புதிய நபர்களை சந்தித்து நல்ல அனுபவத்தை பெறுகிறார்கள். இதனால் மகிழ்ச்சியடைகிறோம்” என்றார்.