பீகார் முதல்வர் நிதிஷ் குமார், பா.ஜ.க-வுடனான கூட்டணியை முறித்துக்கொண்டு, மகாபந்தன் கூட்டணி அரசு அமைத்த பிறகு, `அடுத்த லோக் சபா தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் இவர்தான்!’ எனப் பேச்சுகள் எழுந்தன. அதற்கேற்றாற்போலவே, நிதிஷ் குமாரும் தொடர்ச்சியாகப் பல எதிர்க்கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்து வந்தார்.
இருப்பினும் நிதிஷ்குமார், பிரதமர் வேட்பாளர் என்பதில் தனக்கு விருப்பமில்லை என்றும், எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கவே இந்த முயற்சிகள் என்றும் ஊடகங்களில் வெளிப்படையாகத் தெரிவித்துவந்தார்.
இந்த நிலையில், நிதிஷ் குமாரின் தற்போதைய கூற்று, பலரிடையே மீண்டும் அதேகேள்வியையே எழுப்பியிருக்கிறது. பாட்னாவில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசிய நிதிஷ் குமார், “அடுத்த அரசாங்கத்தை அமைக்க எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால், அனைத்து பின்தங்கிய மாநிலங்களுக்கும் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும். அதுமட்டுமல்லாமல், அதைச் செய்ய முடியாது என்பதற்கு எந்த காரணமும் இல்லை” எனத் தெரிவித்தார்.
ஊடகங்களில், தனக்கு பிரதமர் வேட்பாளர் ஆசையில்லை எனத் தெரிவித்துவிட்டு தற்போது இதுபோன்று உறுதியளித்திருப்பது பேசுபொருளாகியிருக்கிறது. அதுமட்டுமல்லாமல், அரசியல் வியூகவாதியான பிரசாந்த் கிஷோரை அண்மையில் நேரில் சந்தித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.