இஸ்லாமாபாத்: உண்மையான காதல், அழகு – அந்தஸ்தை எல்லாம் பார்க்காது என்பதை மெய்ப்பிக்கும் வகையில், பாகிஸ்தானில் ஒரு காதல் திருமணம் நடைபெற்றுள்ளது. அங்கு பெண் டாக்டர் ஒருவர் தங்கள் மருத்துவமனையில் தூய்மைப் பணியாளராக வேலை பார்த்து வந்த இளைஞரை திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.
உலகில் மனித இனம் தோன்றியது முதலாகவே காதல் இருந்து வருகிறது. விலங்குகளிடம் இருந்து மனிதர்களை வேறுப்படுத்தி காட்டும் குறிப்பிட்ட சில அம்சங்களில் காதலும் முக்கியமான ஒன்று. ஆண்டாண்டு காலமாகவே பல அசாத்திய காதல்கள் பூமியில் அரங்கேறி இருக்கின்றன. ரோமியோ – ஜுலியட், லைலா – மஜ்னு ஆகியோரின் காதல் வாழ்க்கை, காவியங்களையே படைத்திருக்கின்றன.
எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல் வெறும் அன்பை மட்டுமே ஆதாரமாக கொண்டு மலரும் காதல்கள்தான், இதுபோன்ற காவிய நிலைக்கு உயர்கின்றன. அப்படியொரு காதல் கதை பாகிஸ்தானில் நடைபெற்றுள்ளது.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் திபால்பூர் நகரைச் சேர்ந்தவர் கிஷ்வர் ஷாகிபா (27). எம்பிபிஎஸ் – எம்ஸ் படித்துள்ள இவர், திபால்பூரில் உள்ள ஒரு பெரிய தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிபுணராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அந்த மருத்துவமனையில் ஷாசாத் (29) என்பவர் துப்புரவுப் பணியாளராக வேலைக்கு சேர்ந்தார். துப்புரவுப் பணிகளுக்கு இடையே, அங்கிருக்கும் மருத்துவர்களுக்கு தேனீர், ஜூஸ் போன்றவற்றையும் ஷாசாத் கொடுத்து வந்துள்ளார்.
அப்படி முதன்முதலில், மருத்துவர் கிஷ்வருக்கு அவர் டீ கொடுக்க சென்றிருக்கிறார். அப்போது ஷாசாத்தை பார்த்ததுமே கிஷ்வருக்கு மிகவும் பிடித்துப் போனது. ஆனால் அதற்கான காரணம் அவருக்கு தெரியவில்லை. ஒவ்வொரு நாளும் ஏதேனும் ஒரு காரணத்துக்காக ஷாஸாத்தை அழைத்து பேசுவதை அவர் வழக்கமாக கொண்டிருக்கிறார்.
நாட்கள் செல்ல செல்ல, அவர்களின் பழக்கம் காதலாக மாறியது. முதன்முதலில் ஷாஷாத்திடம் கிஷ்வர் தான் தனது காதலை கூறியுள்ளார். இதை கேட்டு ஷாசாத் அதிர்ச்சி அடைந்தார். “நான் ஒரு சாதாரண துப்புரவுத் தொழிலாளி; நீங்கள் பெரிய மருத்துவர். என்னை நீங்கள் காதலிப்பது தெரியவந்தால் உலகமே கேலி செய்யும்” என ஷாசாத் கூறியுள்ளார்.
ஆனால் அதுகுறித்து தனக்கு கவலை இல்லை எனக் கூறிய கிஷ்வர், “எனது காதலை ஏற்றுக்கொள்கிறீர்களா இல்லையா” எனக் கேட்டுள்ளார். கிஷ்வர் மீது காதல் இருந்ததால் ஷாசாத்தும் ஒப்புக்கொண்டார். இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு அவர்கள் இருவரும் பெற்றோர்கள், நண்பர்கள் சூழ திருமணம் செய்து கொண்டனர். தற்போது இவர்களின் புகைப்படங்களும், காதல் கதையுமே சமூக வலைதளங்களை ஆக்கிரமித்து இருக்கின்றன.
இதுகுறித்து கிஷ்வர் கூறும்போது, “ஷாசாத்தை காதலிப்பதாக எனது பெற்றோரிடம் சில வாரங்களுக்கு முன்பே கூறினேன். அதற்கு உடனே அவர்கள், “அவர் மருத்துவராக இருக்கிறாரா” எனக் கேட்டனர். இல்லை, துப்புரவுத் தொழிலாளியாக இருக்கிறார் என நான் கூறினேன். முதலில் அதை கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்துவிட்டனர். பிறகு கடுமையாக எதிர்த்தனர். ஆனால், அவர்களிடம் மெதுவாக கூறி நான் புரிய வைத்தேன். ஏழையாக இருந்தாலும் ஷாசாத் மிகவும் நேர்மையானவர் என்பதை கூறினேன். சில நாட்களுக்கு பிறகு எங்கள் காதலுக்கு அவர்கள் சம்மதம் தெரிவித்தனர். எனவே நாங்கள் திருமணம் செய்து கொண்டோம்” என்றார்.
இதுகுறித்து ஷாசாத் கூறும்போது, “இது எல்லாமே ஒரு கனவு போல உள்ளது. ஏழ்மை நிலையில் இருக்கும் எனக்கு திருமணம் ஆகுமா என்பதே சந்தேகமாக இருந்தது. ஆனால், ஒரு மருத்துவருடன் எனக்கு திருமணம் நடந்துள்ளது. எங்கள் காதல் புனிதமானது என்பதற்கு இதுவே சான்று” என்றார்.