‘பணியின்போது முறைகேடு காரணமாக டிஸ்மிஸ் செய்யப்படும் ஊழியர்களுக்கு பணப்பலன் கிடையாது’ என தமிழக அரசு அறிவித்துள்ளது.
அரசு ஊழியர்களின் விடுப்புக்கான பணப்பலன் தொடர்பான விதிகளில் திருத்தம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி, ‘பணியில் இருக்கும்போது முறைகேடு மற்றும் பிரச்சினைகள் காரணமாக டிஸ்மிஸ் செய்யப்பட்டவர்கள், ஓய்வு நிறுத்தி வைக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கு விடுப்புக்கான பணப்பலன் வழங்கப்பட மாட்டாது’ என தமிழக அரசு அறிவித்துள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களான ஜாக்டோ- ஜியோ மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது, “பள்ளிக் கல்வியில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்கள், 60 வயது வரை பணியாற்றலாம். தொடக்கக் கல்வி, தனியார் பள்ளி நிர்வாகத்துக்கு என, தனி இயக்குனரகம் செயல்படும். நிதி நிலை சரியானதும் மற்ற அறிவிப்புகள் வரும்” என்றார்.
அரசு ஊழியர்களின் நீண்டகால கோரிக்கைகளை முதல்வர் நிறைவேற்றுவது தொடர்பாக அறிவிப்பார் என எதிர்பார்த்திருந்த அரசு ஊழியர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
எதிர்பார்த்த அறிவிப்புகள் வராததால், மாநாட்டில் முதல்வர் பேசிக்கொண்டிருந்த போதே, ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கூட்டம் கூட்டமாக கலைந்து சென்றனர்.
ஜாக்டோ – ஜியோவின் வாழ்வாதார நம்பிக்கை மாநாடு படுதோல்வி அடைந்து விட்டதாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.
இந்த நிலையில், பணியின்போது டிஸ்மிஸ் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு பணப்பலன் கிடையாது என தமிழக அரசு அறிவித்திருப்பது அரசு ஊழியர்களிடம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.