திங்கள்கிழமை (செப். 19) நடைபெறவுள்ள ,பிரித்தானியாவின் இரண்டாம் எலிசபெத் மகாராணியாரின் இறுதிக் கிரியைகளில் 500க்கும் அதிகமான அரச தலைவர்கள் அடங்கலாக முக்கியத்தவர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வர்த்தக விமானங்களின் மூலம் வருகை தருமாறு அரசத் தலைவர்களுக்கு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது. ஐரோப்பா கண்டத்தில் உள்ள பெல்ஜியம், நெதர்லாந்து, ஸ்பெயின், நோர்வே, சுவீடன், டென்மார்க், மொனோக்கோ போன்ற நாடுகளின் அரச குடும்பத்தவர்களும் மகாராணியாரின் இறுதிக் கிரியைகளில் கலந்து கொள்வார்கள்.
மகாராணியார் அரச தலைவராக பணியாற்றிய கனடா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் பிரதமர்களும் இந்த நிகழ்வுகளில் பங்கேற்கவிருக்கிறார்கள்.
அவர்கள் மேற்கு லண்டனில் உள்ள ஓரிடத்தில் இருந்து பேருந்துகள் மூலம் மொத்தமாக அழைத்துச் செல்லப்படுவார்கள்.இறுதிச்சடங்கு நடைபெறவுள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபே-யில், சுமார் 2,200 பேர் அமரும் வகையிலான இடவசதி உள்ளது.
இலங்கை – இந்திய ஜனாதிபதிகள், பங்களாதேஷ் பிரதமர் ஆகியோரும் மகாராணியாரின் இறுதிக் கிரியைகளில் பங்கேற்கவிருக்கிறார்கள். மகாராணியாரின் இறுதிக் கிரியைகளில் பங்கேற்க சிரியா, வெனிசுவேலா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று பிபிசி உலக சேவை செய்தி வெளியிட்டுள்ளது.
காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் இறுதிச்சடங்கில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பனேசே, நியூஸிலாந்து பிரதமர் ஜெஸிண்டா ஆர்டர்ன் மற்றும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆகியோர் அழைப்பை ஏற்றுக்கொண்டுள்ளனர்.