உக்ரைனிலிருந்து திரும்பிய மருத்துவ மாணவர்கள் இந்தியாவில் படிப்பை தொடர முடியாது-மத்திய அரசு

உக்ரைன்-ரஷ்யா போர் காரணமாக உக்ரைனில் இருந்து இந்தியா திரும்பிய மருத்துவ மாணவர்கள் இந்தியாவில் படிப்பினை தொடர ஏற்பாடுகள் செய்து தர இயலாது என மத்திய  அரசு, உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 

உக்ரைன்-ரஷ்யா இடையே ஏற்பட்ட போர் காரணமாக உக்ரைனில் மருத்துவம் படித்த இந்திய மாணவர்கள் 20,000 பேர் நாடு  திரும்பினர். இவர்கள், இந்தியாவில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பயில்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, கடந்த ஆகஸ்ட் 3-ம் தேதி வெளியுறவுத்துறைக்கான மக்களவை குழு, மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்திருந்தது. 

ஆனால் இதுசம்பந்தமாக தேசிய மருத்துவ ஆணையம் மற்றும் மத்திய அரசு தரப்பில் இருந்து எந்தப் பதிலும் வராத நிலையில், உச்சநீதிமன்றத்தில் இதுதொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு கடந்த 5-ம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதி ஹேமந்த் குப்தா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கில் விரிவான பதிலளிக்க மத்திய அரசு மற்றும் தேசிய மருத்துவக் கல்வி ஆணையத்திற்கு நீதிபதிகள் நோட்டீஸ் பிறப்பித்து வழக்கை செப்டம்பர் 15-ம் தேதிக்கு ஒத்திவைத்திருந்தனர். 

image
இந்த வழக்கில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ள மத்திய அரசு, உக்கரைனில் இருந்து இந்தியா திரும்பியுள்ள மருத்துவ மாணவர்கள் இந்திய பல்கலைக்கழகங்களில் படிப்பினை தொடர ஏற்பாடுகளை செய்து தர முடியாது, அவ்வாறு இந்தியாவில் படிப்பினை தொடர தளர்வுகளை செய்து கொடுத்தால் அது இந்தியாவில் மருத்துவம் பயிலும் மாணவர்களின் தரத்தை பாதிக்கும் எனவும், குறிப்பாக வெளிநாடுகளில் படித்த இந்திய மாணவர்கள் அவர்களின் படிப்பை இடையில் இந்திய பல்கலைக்கழகங்களில் தொடர வழிவகை செய்யும் முறை “தேசிய மருத்துவ சட்டத்தில்” வழிவகை செய்யப்படவில்லை எனவும், மத்திய அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வை எழுத விரும்பாதவர்கள் மற்றும் ஏழை மாணவர்கள் ஆகியோர்தான் வெளிநாடு சென்று மருத்துவம் படிப்பதை தேர்ந்தெடுத்துள்ளனர். இதில் ஏழை மாணவர்களுக்கு மட்டும் இந்தியாவில் படிக்க வாய்ப்பு வழங்கப்பட்டால், அது பல்வேறு சட்ட வழக்குகள் பலரும் தொடர வழிவகை செய்து விடும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.