டெல்லி: உக்ரைன் போரால் திரும்பி வந்த மருத்துவ மாணவர்கள் இந்தியாவில் படிப்பை தொடர முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. ரஷ்யா – உக்ரைன் இடையே ஏற்பட்டுள்ள போர் காரணமாக உக்ரைனில் மருத்துவம் படித்து வந்த மாணவர்கள் சுமார் 20 ஆயிரம் பேர் இந்தியா திரும்பினர். அவர்கள் இந்தியாவில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரிகளில் படிப்பை தொடர நடவடிக்கை எடுக்குமாறு ஒன்றிய சுகாதார மற்றும் குடும்ப நிலத்துறை அமைச்சகத்துக்கு வெளியுறவுத்துறைக்கான மக்களவைக்குழு கடந்த ஆகஸ்ட் 3ம் தேதி பரிந்துரை செய்திருந்தது.
ஆனால் இது குறித்து தேசிய மருத்துவ ஆணையம் மற்றும் ஒன்றிய அரசு தரப்பில் எந்தவித பதிலும் வராததால் உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. கடந்த 5ம் தேதி இந்த வழக்கு மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வில் விசாரணைக்கு வந்த போது; தனது நிலைப்பாட்டை தெரிவிக்குமாறு ஒன்றிய அரசு மற்றும் தேசிய மருத்துவ கல்வி ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்பி வழக்கை ஒத்திவைத்தது. இந்நிலையில் இன்று மீண்டும் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்த போது உக்ரைனில் இருந்து இந்தியா திரும்பி உள்ள மருத்துவ மாணவர்கள் இந்திய பல்கலைக்கழகங்களில் படிப்பை தொடர ஏற்பாடுகளை செய்து தர இயலாது என்று ஒன்றிய அரசு தெரிவித்தது.
அவர்களுக்கு இந்தியாவில் படிப்பை தொடர தளர்வுகள் செய்து தரப்பட்டால் இந்தியாவில் மருத்துவம் படிக்கும் மாணவர்களின் தரம் பாதிப்படையும் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் தேசிய மருத்துவ சட்டத்தில் வெளிநாடுகளில் படித்த இந்திய மாணவர்கள் இந்திய பல்கலைக்கழகங்களில் படிப்பை தொடர வழிவகை இல்லை என்றும் தெரிவித்தது.