சிங்க நடையும், சிங்காரத் தென்றல் நடையும் – பொங்கு கடல் நடையும், புரட்சிக் கவி நடையும் ஒரு சேரத் தன் உரை நடையால் கண்ட பூமான், தம்பிமார் மீது விழியோட்டி வெற்றி கொள்ளும் கோமான்.
பூமிப் பந்தில் தமிழர்கள் எங்கெங்கு இருக்கிறார்களோ – அங்கெல்லாம் அவர்களது இதயத்தில் தங்கச் சிம்மாசனம் போட்டு வீற்றிருக்கும் மன்னன் சிந்தை, அணு ஒவ்வொன்றையும் சிலிர்க்கச் செய்யும் வகையில் நம்மையெல்லாம் ‘தம்பீ ‘ என்று அழைத்திட்ட அண்ணன் பேரறிஞர் அண்ணா அவர்கள் நம்மை விட்டுப் பிரித்து வங்கக் கடலருகில் நீங்காத் துயிலில் ஆழ்ந்திருக்கிறார்.
உருவ அளவில் நம்மை விட்டுப் பிரிந்தார் என்றாலும் – நம் உணர்ச்சி யோடும், எழுச்சியோடும், ஊனோடும், உதிரத்தோடும், உயிர் மூச்சோடும், நாடித் துடிப்போடும் அண்ணா அவர்கள் இரண்டறக் கலந்து விட்டார்கள்.
தமிழில் மூன்றெழுத்துக்கு சிறப்புண்டு.
மூவேந்தர் – முக்கொடி – முக்கனி என மும்முரசார்த்தவர் தமிழர்.
அவர் வாழ்ந்த தமிழ் ‘வாழ்வு’க்கு மூன்றெழுத்து.
அந்த வாழ்வுக்கு அடிப்படையான அன்பு – மூன்றெழுத்து.
அன்புக்குத் துணை நிற்கும் அறிவு – மூன்றெழுத்து.
அறிவார்ந்தோர் இடையிலெழும் காதலுக்கு மூன்றெழுத்து.
காதலர்கள் போற்றி நின்ற கடும் வீரம் – மூன்றெழுத்து.
வீரம் விளைவிக்கின்ற களம் – மூன்றெழுத்து.
களம் சென்று காணுகின்ற வெற்றி – மூன்றெழுத்து.
அந்த வெற்றிக்கு நமையெல்லாம் ஊக்குவிக்கும் அண்ணா – மூன்றெழுத்து.
இன்று அவர் நம்மிடையே இல்லை. இந்தச் சொல்லைக் கூறும் போது எழுகின்ற துக்கத்திற்கும் எல்லை இல்லை.
அந்த ‘எல்லையில்லாத் துக்கம் – துயரம் பற்றி’ அண்ணன் கொடுத்த தமிழ் எடுத்துப் பாடுகிறேன்- ஒரு கவிதை :
அண்ணா என்ற சொல்லால்
அழைக்கட்டும் என்றே – அவர் அன்னை
பெயரும் தந்தார்.
அந்த அன்னைக் குலம் போற்றுதற்கு
ஒளவைக்கோர் சிலை
அறம் வளர்த்த கண்ணகிக்கோர் சிலை
வளையாத நெஞ்சப் பாரதிக்கும்
வணங்காமுடிப் பாரதிதாசருக்கும் சிலை
வீரமா முனிவருக்கும் சிலை
கால்டுவெல், போப்புக்கும் சிலை
கம்பருக்கும் சிலை
தீரமாய்க் கப்பலோட்டிய தமிழர்க்கும் சிலை
திக்கெட்டும் குறள் பரப்ப திருவள்ளுவர்க்கும் சிலை
பத்துச் சிலை வைத்ததனால் – அண்ணன்
தமிழின்பால் வைத்துள்ள பற்றுதலை உலகறிய
அந்த – அண்ணனுக்கோர் சிலை
சென்னையிலே வைத்தபோது…
ஆட்காட்டி விரல் மட்டும் காட்டி நின்றார்…
ஆணையிடுகின்றார் எம்
‘அண்ணா’ என்றிருந்தோம்.
அய்யகோ! ‘இன்னும்
ஓராண்டே வாழப் போகிறேன்’ என்று அவர்
ஓர் விரல் காட்டியது இன்றன்றே புரிகிறது!
எம் அண்ணா… இதய மன்னா…
‘படைக்கஞ்சாத் தம்பியுண்’டென்று பகர்ந்தாயே;
எமைவிடுத்துப் பெரும் பயணத்தை
ஏன் தொடர்ந்தாய்?
உன் கண்ணொளியின் கதகதப்பில் வளர்ந்தோமே
எம் கண்ணெல்லாம் குளமாக
ஏன் மாற்றி விட்டாய்?
நிழல் நீதான் என்றிருந்தோம்;
நீ கடல் நிலத்துக்குள்
நிழல் தேடப் போய் விட்டாய் நியாயந்தானா?
கடலடியில் இருக்கின்ற முத்தெல்லாம் முத்தல்ல;
நான்தானடா நன்முத்து எனச் சொல்லி கடற்கரையில் உறங்குதியோ?
நாத இசை கொட்டுகின்ற
நாவை ஏன் சுருட்டிக் கொண்டாய்
விரல் அசைத்து எழுத்துலகில் விந்தைகளைச் செய்தாயே; அந்த
விரலை ஏன் மடக்கிக் கொண்டாய்?
கண் மூடிக்கொண்டு நீ சிந்திக்கும் பேரழகைப் பார்த்துள்ளேன்…
இன்று –
மண்மூடிக் கொண்டுன்னைப் பார்க்காமல்
தடுப்பதென்ன கொடுமை!
கொடுமைக்கு முடிவு கண்டாய்;
எமைக் கொடுமைக்கு ஆளாக்கி
ஏன் சென்றாய்?
‘எதையும் தாங்கும் இதயம் வேண்டு’மென்றாய்
இதையும் தாங்க ஏதண்ணா எமக்கிதயம்?
கடற்கரையில் காற்று வாங்கியது போதுமண்ணா:
எழுந்து வா எம் அண்ணா!
வர மாட்டாய், வர மாட்டாய்;
இயற்கையின் சதி எமக்குத் தெரியுமண்ணா…
நீ இருக்கு மிடந்தேடி யான் வரும் வரையில்
இரவலாக உன் இதயத்தைத் தந்திடண்ணா.
நான் வரும்போது கையோடு கொணர்ந்து
அஃதை உன் கால் மலரில் வைப்பேன் அண்ணா!
-மு.கருணாநிதி