நெல்லை மாவட்டம், அடைமிதிப்பான்குளம் கல்குவாரியில் ஏற்பட்ட விபத்தில் நான்கு அப்பாவி உயிர்கள் பலியானது. அதைத் தொடர்ந்து கல்குவாரிகளில் விதிமுறை மீறல்கள் இருப்பது தெரியவந்ததால் குழுக்கள் அமைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், பல குவாரிகளிலும் விதிமுறைகளை மீறி கனிம கடத்தல் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக விதிமீறலில் ஈடுபட்ட கல்குவாரிகளுக்கு 300 கோடி ரூபாய் அளவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அபராதத்தைக் கட்டிவிட்டு குவாரிகளை இயக்க யாரும் முன்வராததால் மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகள் அனைத்தும் மூடிக்கிடக்கின்றன. இருப்பினும், அனுமதியின்றி பாறைகள், ஜல்லி கற்கள், எம்.சாண்ட் ஏற்றி வரும் லாரிகள் பிடிபடுவது வாடிக்கையாகி வருகிறது.
தமிழகத்திலிருந்து கனிமங்கள் கேரளாவுக்கு கடத்தப்பட்டு வருகின்றன. அதைத் தடுக்க காவல்துறையினர் தீவிர முயற்சிகள் மேற்கொண்டபோதிலும் ஒரு சில காவலர்களின் துணையுடன் கனிம கடத்தல் தொடர்கிறது. இந்த நிலையில், நெல்லை மாவட்ட எல்லையான பழவூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட விஸ்வநாதபுரம் வழியாக கனிம கடத்தல் நடப்பதாக தகவல் வந்ததால் போலீஸார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாகவந்த இரு டாரஸ் லாரிகளை மறித்து சோதனையிட்டபோது அனுமதிச் சீட்டு இல்லாமல் 10 டன் சரள் மண் ஏற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. லாரி டிரைவர்கள் ரமேஷ், ஜெயபாலன் ஆகியோர் தப்பியோட முயன்றபோது போலீஸாரிடம் பிடிபட்டனர். அவர்கள் இருவரையும் கைதுசெய்த போலீஸார் லாரிகளையும் பறிமுதல் செய்தனர்
பிடிபட்ட டிரைவர்களிடம் நடத்திய விசாரணையில் அந்த டாரஸ் லாரிகள் இரண்டும் நெல்லை தொகுதியின் எம்.பி-யான ஞானதிரவியத்தின் மகன் தினகரனுக்குச் சொந்தமானது என்பது தெரியவந்தது. அதனால் போலீஸார் அவரையும் வழக்கில் சேர்த்தனர். ஆனால், தன்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை அறிந்த தினகரன், தலைமறைவாகி விட்டார். அவரைத் தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே, பிடிபட்டது 9 லாரிகள் என்றும் அவற்றை விடுவிக்குமாறு தி.மு.க-வின் மேலிடத்திலிருந்து அழுத்தம் வந்ததால் ஏழு லாரிகள் விடுவிக்கப்பட்டதாகவும் பழவூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கிறார்கள். இது குறித்து காவல்துறையினரிடம் கேட்டதற்கு, அந்தத் தகவலை உறுதிப்படுத்த மறுத்துவிட்டனர்.
கனிம கடத்தல் வழக்கில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த எம்.பி-யின் மகனுக்கு தொடர்பு இருக்கும் விவகாரம் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.