பெங்களூரு: கட்டாய மதமாற்றத்தை தடை செய்யும் மசோதா கர்நாடக மேலவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசு, அம்மாநிலத்தில் கட்டாய மதமாற்றத்தைத் தடை செய்யும் நோக்கில் அதற்கான மசோதாவை கடந்த ஆண்டு டிசம்பரில் கொண்டு வந்தது. அப்போது இந்த மசோதா சட்டப்பேரவையின் கீழவையில் நிறைவேற்றப்பட்டது.
எனினும், மேலவையில் போதிய எண்ணிக்கை பலம் இல்லாததால், மசோதா அங்கு தாக்கல் செய்யப்படவில்லை. இதனால், இந்த மசோதா நிலுவையில் இருந்தது. இதனிடையே, கட்டாய மதமாற்றத்தைத் தடை செய்யும் அவசர சட்டத்தை கடந்த மே மாதம் மாநில அரசு அமல்படுத்தியது.
இந்த மசோதா மேலவையில் இன்று விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. விவாதத்தில், ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பங்கேற்றுப் பேசினர்.
இந்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ், வாக்கெடுப்பில் பங்கேற்காமல் வெளிநடப்பு செய்தது.
இதையடுத்து, குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு மசோதா நிறைவேற்றப்பட்டது.
பின்னர் பேசிய சட்ட அமைச்சர் மது சாமி, விருப்பப்பட்டு ஒருவர் மதம் மாறுவதை இந்த சட்டம் தடுக்காது என்றும் கட்டாய மதமாற்றத்தை தடுக்கும் நோக்கிலேயே இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் கூறினார். எனவே, எவரது விருப்பத்திற்கும் அரசு தடை போடவில்லை என அவர் தெரிவித்தார்.
இந்த சட்டம் குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் உறுப்பினர் நாகராஜ், மதம் என்பது தனி நபர் சம்பந்தப்பட்டது என்றும் அது ஒருவரின் தனிப்பட்ட உரிமை என்றும் அதில் அரசு தலையிடக் கூடாது என்றும் குறிப்பிட்டார்.