முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணாவின் பிறந்த தினமான இன்று, அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
மதுரை நெல்பேட்டையில் நடந்த விழாவில் அமைச்சர்கள் எ.வ.வேலு, பி.மூர்த்தி, பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், அன்பில் மகேஸ், கீதா ஜீவன் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். முதலில் சமையல் கூடத்தை பார்வையிட்டு உணவு வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதலமைச்சர்.
பின்பு காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்துப் பேசிய மு.க.ஸ்டாலின், “பள்ளிக்கு பசியோடு வருகிற குழந்தைகளுக்கு உணவு வழங்கிவிட்டு அடுத்ததாக வகுப்பறைக்கு அனுப்பும் திடத்தை தொடங்கியுள்ளோம்.
தானிய உற்பத்தியில் தமிழகம் இன்று முதலிடத்தில் உள்ள நிலையில், யாரும் பசியோடு இருக்கக்கூடாது என்ற அடிப்படையில் மதுரை நெல்பேட்டையில் இத்திட்டம் தொடங்கப்படுகிறது.
102 ஆண்டுகளுக்கு முன்னால் நீதிக்கட்சி ஆட்சியில் ஆயிரம் விளக்குப் பகுதியில் மதிய உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது. அன்று ஆயிரம் விளக்கில் தொடங்கப்பட்ட திட்டம், இன்று தூங்கா நகரில் காலை உணவுத் திட்டமாக விரிவடைந்துள்ளது.
அமெரிக்காவில், ஐரோப்பாவில் காலை உணவு திட்டம் தொடங்கப்படுள்ளது. இதன் மூலம் மாணவர்கள் உடல் நலம் சிறப்பாக இருப்பதாகவும், பள்ளிக்கு வருகை அதிகரித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
பசித்த வாய்க்கு உணவாக, தவித்த வாய்க்கு தண்ணீராக கருணை வடிவமாக இத்திட்டம் உள்ளது. வரலாற்றில் இத்திட்டம் நிலைத்து நிற்கும். ஏழை எளிய ஒடுக்கப்பட்ட சமூக குழந்தைகள் சாப்பிடும்போது பார்க்க மகிழ்சியாக உள்ளது.
பண்டிதர் அயோத்தி தாசர் கேட்டுக்கொண்டதற்கிணங்க நீதிக்கட்சி ஆட்சியில் தியாகராயர் அவர்கள் மதிய உணவுத் திட்டத்தை தொடங்கினார். அதன் பின்பு காமராஜர் விரிவுபடுத்தினார். அதை அப்போது சிறப்பாக செயல்படுத்தியவர் கல்வித்துறையில் பணியாற்றிய பெரியாரின் பெருந்தொண்டர் நெ.து.சுந்தரவடிவேலு.
அதன் பின்பு கலைஞர் ஆட்சியில் 1971-ல் ஊட்டச்சத்து திட்டத்தை கொண்டு வந்தார். பேபி ரொட்டி என்ற தொட்டத்தை கலைஞர் குழந்தைகளுக்காக கொண்டு வந்தார். அடுத்து, எம்.ஜி.ஆர் ஆட்சியில் மதிய உணவுத்திட்டம் சத்துணவு திட்டமாக விரிவுபடுத்தப்பட்டது. அதன் பின்பு 1989-ல் கலைஞர் அதை விரிவுபடுத்தி முட்டையுடன் உண்மையான சத்துணவு வழங்க உத்தரவிட்டார். அதை அப்படியே விரிவுபடுத்தி வாரம் 5 நாட்களும் முட்டை வழங்க உத்தரவிட்டார். ஜெயலலிதா ஆட்சியில் கலவை சாதம் அளிக்க உத்தரவிட்டார்.
மதிய உணவுத்திட்ட வரிசையில் காலை உணவுத்திட்டம் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. 1,14,000 குழந்தைகளுக்கு காலை உணவு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. விரைவில் இது இன்னும் விரிவுபடுத்தப்படும். ஒரு குழந்தைக்கு 12.75 பைசா செலவாகிறது. ஆனால், அது செலவு அல்ல. நிர்வாக மொழியில் அப்படி சொன்னேன். இலவசம், தர்மம், தானம், சலுகையில் கொடுக்கும் உணவு அல்ல. அரசுக்கு செலவும் அல்ல. அரசின் கடமை.
பசிப்பிணி நீங்கிவிட்டால் மன நிறைவுடன் பிள்ளைகள் கல்வி கற்பார்கள். மனதில் பாடங்கள் பதியும். கல்வி ஒன்றுதான் நம்மிடமிருந்து யாராலும் பிரிக்க முடியாது.”என்று பேசினார். பின்பு நெல்பேட்டையிலுள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தார்.