இந்தியாவில் பெட்ரோல், கனிம உற்பத்தியில் ஈடுபட்டுள்ள வேதாந்தா நிறுவனம் செமி கண்டக்டர் தயாரிக்கும் தொழிற்சாலையைக் குஜராத்தில் அமைக்க அந்த மாநில அரசுடன் இரண்டு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. இதன் மூலம் ரூ.1.54 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும் என்றும், ஒரு லட்சத்திற்கும் அதிகமானோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் தொழிற்சாலையை மகாராஷ்டிராவிற்கு கொண்டுவர மாநில அரசு கடும் முயற்சி மேற்கொண்டது. ஆனால், வேதாந்தா நிறுவனம் மகாராஷ்ட்ராவுக்குப் பதிலாக குஜராத்தைத் தேர்ந்தெடுத்துள்ளது. அகமதாபாத் அருகில் இந்த தொழிற்சாலை அமைக்கப்பட இருக்கிறது. இதற்காக மாநில அரசு 1000 ஏக்கர் நிலம் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
பா.ஜ.க மேலிடத் தலைவர்களின் நிர்ப்பந்தம் காரணமாகவே இந்தத் தொழிற்சாலை குஜராத்திற்கு சென்றதாக மகாராஷ்டிரா எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளது.
‘‘இந்தத் தொழிற்சாலையைத் தொடங்க மாநில அரசு ரூ.30 ஆயிரம் கோடி அளவுக்கு சலுகைகள் கொடுப்பதாகவும், 1,100 ஏக்கர் நிலம் கொடுக்கத் தயாராக இருப்பதாகவும் வேதாந்தா நிறுவனத்திடம் தெரிவித்தோம். செமிகண்டக்டர் நிறுவனத்தை மகாராஷ்டிராவிற்குக் கொண்டுவர அனைத்து முயற்சிகளை மேற்கொண்டோம்’’ என்று முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டம் குஜராத்திற்கு கைமாறியதற்கு முந்தைய சிவசேனா கூட்டணி அரசுதான் காரணம் என்று மாநில அமைச்சர் உதய் சாவந்த் தெரிவித்துள்ளார். அவர் இது தொடர்பாக மேலும் கூறுகையில், ‘‘முந்தைய அரசுதான் இந்த விவகாரத்தில் மிகவும் மந்தமாக செயல்பட்டது. அதனால் மகாராஷ்டிராவிற்கு இந்தத் திட்டம் கிடைக்கவில்லை. செமிகண்டக்டர் தயாரிப்பு தொழிற்சாலை போன்ற ஒரு தொழிற்திட்டத்தை மகாராஷ்டிராவிற்கு ஒதுக்குவதாக பிரதமர் உறுதியளித்துள்ளார் என்று தெரிவித்தார்.
செமிகண்டக்டர் தயாரிக்கும் தொழில் திட்டத்துடன், மேலும் ஒரு தொழில் வாய்ப்பு மகாராஷ்டிராவை விட்டு கைமாறியிருக்கிறது. மகாராஷ்டிராவின் ராய்கட் மாவட்டத்தில் 5,000 ஏக்கரில் மருந்து பார்க் அமைக்கத் திட்டமிடப்பட்டு இருந்தது மகாராஷ்ட்ரா அரசாங்கம். இதற்காக முந்தைய அரசு நிலத்தைக் கையகப்படுத்தி இருந்ததாகவும், இந்தத் திட்டமும் இப்போது குஜராத், ஆந்திரா, இமாச்சலப்பிரதேசத்திற்கு சென்றுவிட்டதாக சிவசேனா தலைவர்களில் ஒருவரான ஆதித்ய தாக்கரே தெரிவித்துள்ளார். இதன் மூலம் மகாராஷ்டிரா ரூ.30,000 கோடிக்கான முதலீட்டை இழந்திருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
எதிர்க்கட்சிகளின் இந்தக் குற்றச்சாட்டால் மகாராஷ்டிரா அரசுக்குத் தர்மசங்கடமான நிலை உருவாகி இருக்கிறது. இதனால் ஏர்பஸ் மற்றும் டாடா இணைந்து போர்விமானங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை மகாராஷ்டிராவிற்கு கொண்டுவர வேண்டும் என்பதில் மகாராஷ்ட்ரா மாநில அரசு தீவிரமாக இருக்கிறது. இந்தத் திட்டத்தைப் பெற பா.ஜ.க ஆளும் உத்தரப்பிரதேசம், கர்நாடகா, மத்தியப்பிரதேசங்களும் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன.
இது குறித்து மாநில தொழில் துறை அமைச்சர் உதய் சாவந்த் கூறுகையில், ‘‘மகாராஷ்டிராவில் ஏற்கெனவே புனே, நாசிக், ஒளரங்காபாத், அகமத் நகர் போன்ற பகுதியில் பாதுகாப்பு ஆயுதங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. எனவே, டாடா போர் விமானங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை மகாராஷ்டிராவில் தொடங்க மற்ற மாநிலங்கள் கொடுக்கும் சலுகையைவிட அதிகப்படியான சலுகைகளை மாநில அரசு வழங்கத் தயாராக இருக்கிறது. இந்த விவகாரத்தில் விரைவில் முதல்வரும், துணை முதல்வரும் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசுவார்கள். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜய் தோவாலுடன் இது குறித்து துணை முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் ஏற்கெனவே ஆலோசனை நடத்தியுள்ளார் என்று தெரிவித்தார்.
நம் நாட்டிலேயே மகாராஷ்டிராதான் தொடர்ந்து அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதில் முன்னிலையில் இருக்கிறது. கடந்த 2020-22ம் ஆண்டு வரை மகாராஷ்டிரா 1.74 லட்சம் கோடி அளவுக்கு அந்நிய முதலீடுகளை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது!