ராஞ்சி: தனது சட்டமன்ற உறுப்பினர் பதவி தொடர்பாக எழுந்துள்ள குழப்பத்திற்கு முடிவு கட்டுமாறு ஜார்க்கண்ட் ஆளுநர் ரமேஷ் பையசை சந்தித்து, அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் வலியுறுத்தி உள்ளார்.
ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆதாயம் அடைந்ததாக இந்திய தேர்தல் ஆணையத்திடம் பாஜக குற்றம்சாட்டி இருந்தது. இதன் அடிப்படையில், அவரது சட்டமன்ற உறுப்பினர் பதவியை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் அக்கட்சி கோரியிருந்தது.
இது குறித்து விசாரணை நடத்திய இந்திய தேர்தல் ஆணையம், தனது பரிந்துரையை மாநில ஆளுநருக்கு எழுத்துபூர்வமாக கடந்த மாதம் 25ம் தேதி அனுப்பியது. அதில் என்ன பரிந்துரைக்கப்பட்டது என்பது குறித்து ஆளுநர் இதுவரை தெரிவிக்கவில்லை. எனினும், ஹேமந்த் சோரனை தகுதி நீக்கம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல் பரவியது. இதனால், தனது பதவி பறிபோகலாம் என்ற அச்சத்தில் ஹேமந்த் சோரன் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஆளுநர் ரமேஷ் பையசை சந்தித்த ஹேமந்த் சோரன், தனது கோரிக்கை மனுவை அவரிடம் அளித்தார். இந்திய தேர்தல் ஆணையம் அளித்துள்ள பரிந்துரை கடிதத்தின் நகலை விரைவாக தனக்கு அளிக்குமாறும், தன் தரப்பு நியாயங்களை எடுத்துரைக்க வாய்ப்பு அளிக்குமாறும் அதில் அவர் கோரியுள்ளார்.
கடந்த 3 வாரங்களாக மாநிலத்தில் நிலவி வரும் நிச்சயமற்ற நிலை, ஜனநாயகத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ள ஹேமந்த் சோரன், இந்தச் சூழலைப் பயன்படுத்தி எதிர்க்கட்சியான பாஜக, எம்எல்ஏக்களை வேட்டையாட முயல்வதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.