உலகளவில் கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் எண்ணிக்கை குறைந்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
சீனாவின் உகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் உருமாற்றமடைந்து வைரஸ் தொடர்ந்து பரவி வருகிறது.
இந்நிலையில், உலகளவில் கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் எண்ணிக்கை குறைந்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் Tedros Adhanom Ghebreyesus தெரிவிக்கையில், ‘கொரோனாவால் ஏற்பட்ட அச்சுறுத்தல் முடிவுக்கு வருவது போல் உள்ளது. கொரோனாவால் உயிரிழப்போர் எண்ணிக்கை கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த வாரம் குறைந்துள்ளது. கொரோனா தொற்று இன்னும் முடிவுக்கு வரவில்லை. ஆனால் முடிவுக்கு வருவதற்கான அறிகுறி உள்ளது’ என்று அவர் தெரிவித்துள்ளார்.