தமிழக அரசின் புதிய மின் கட்டண உயர்வு விசைத்தறியாளர்களை கடும் சிரமத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் அருகே கோம்பக்காட்டுபுதூரில் இன்று (செப்.15) நடைபெறுகிறது.
இது தொடர்பாக விசைத்தறியாளர்கள் கூறியதாவது:
அரசு அமல்படுத்தியுள்ள 30 சதவீத மின் கட்டண உயர்வு என்பது, விசைத்தறியில் அனைத்து சிலாப்புகளுக்குமான மின் கட்டண உயர்வாகும். ஒரு யூனிட்டுக்கு ரூ.1.40 உயர்வு, ஒவ்வொரு விசைத்தறியாளருக்கும் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை உயரும்.
இதனை கூலிக்கு நெசவு செய்யும் எங்களால் எந்த வகையிலும் ஈடுசெய்ய முடியாது. சாதாரண விசைத்தறி ‘3 ஏ-2’க்கு முழுமையாக விலக்கு அளிக்க வேண்டும்.
இதுதொடர்பாக, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் கருத்துகேட்பு கூட்டத்தில், ஆயிரக்கணக்கான விசைத்தறியாளர்கள் குடும்பத்தோடு பங்கேற்று, எதிர்ப்பை பதிவு செய்தும் எந்த பயனுமில்லை.
ஆண்டுதோறும் மின் கட்டணத்தை 6 சதவீதம் உயர்த்துவது என்பது, நிரந்தர வருமானமில்லாத விசைத்தறி தொழிலையும், சிறு, குறு தொழில்களையும் அழிக்கவே செய்யும். மின்கட்டண உயர்வை கண்டித்து 1990-ம் ஆண்டைப்போல மின்கட்டணம் செலுத்தாமல் போராட்டம் நடத்த திட்டவட்டமாக முடிவு செய்துள்ளோம்.
அனைத்து விசைத்தறியாளர்களும் கடந்த 10-ம் தேதி வரை பயன்படுத்திய மின்சாரத்துக்கு மட்டுமே கட்டணம் செலுத்த உள்ளனர். அதேபோல தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்பாக இன்றைய பொதுக்குழுவில் முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்புகள் உண்டு.
இவ்வாறு அவர்கள் கூறினர்.