புதுடெல்லி: ‘சண்டையே இல்லாமல் சீனாவுக்கு 1000 சதுர கிலோ மீட்டர் இந்திய மண்ணை தாரை வார்த்துக் கொடுத்துள்ளார்?’ என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டி உள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் நேற்று வெளியிட்டுள்ள பதிவில், ‘சண்டையே இல்லாமல் சீனாவுக்கு 1000 சதுர கிலோ மீட்டர் இந்திய மண்ணை பிரதமர் மோடி தாரை வார்த்துக் கொடுத்துள்ளார். ஏப்ரல் 2020ம் ஆண்டுக்கு முன்பு இருந்த நிலவரப்படி எல்லையை வரையறுக்க சீனா ஒப்புக் கொள்ளவில்லை. அந்நாட்டிடம் இழந்த ஆயிரம் சதுர கிலோ மீட்டர் மண் எப்படி மீட்கப்படும் என்று ஒன்றிய அரசு தெரிவித்தால் நன்றாக இருக்கும்,’ என்று கூறியுள்ளார். கடந்த 12ம் தேதி இந்திய, சீனப் படைகள் கிழக்கு லடாக் பகுதியில் காக்ரா ஹாட்ஸ்பிரிங் எனும் பகுதியில் இருந்து திரும்பப் பெறப்பட்டன. இரு நாடுகள் இடையேயான உறவில் இதை பெரிய முன்னேற்றமாக ஒன்றிய அரசும், பாஜவும் கூறிவரும் நிலையில், ராகுல் காந்தி இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.