மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் ஒரே குடியிருப்பில் வணிகவியல் படிக்கும் மாணவியும், அனிமேஷன் படிக்கும் மாணவியும் வசித்து வந்தனர். 19 வயதுடைய இரண்டு பெண்களும் சிறுவயது முதலே நெருங்கிய தோழிகளாக பழகி வந்திருக்கிறார்கள். இந்த நிலையில், நேற்று மாலை வணிகவியல் படிக்கும் மாணவி அவரின் வீட்டின் அறையில் பிணமாக மீட்கப்பட்டார். ஆவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. என்ன காரணத்துக்காகத் தற்கொலை செய்துகொண்டார் எனத் தெரியாத நிலையில், காவல்நிலையத்துக்குத் தகவல் அளிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறை உடலை மாலை 7 மணியளவில் ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தது. அதை மாடியிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த தோழியான மற்றொரு மாணவி சோகமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. அதன்பிறகு யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் அந்த மாணவி குடியிருப்பின் 5 வது மாடியிலிருந்து 7:45 மணிக்குக் குதித்து தற்கொலை செய்துகொண்டார். அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே அவரும் இறந்துவிட்டார்.
சிறுவயது தோழிகள் இருவரும் ஏன் தற்கொலை செய்துக்கொண்டார்கள் என்ற தகவல் இதுவரை தெரியவில்லை. தற்கொலை குறிப்பு எதுவும் கிடைக்காத நிலையில், காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டுவருகிறது. ஒரே நாளில் அடுத்த ஒரு மணி நேர இடைவெளியில் இரண்டு தோழிகளும் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.