செப்டெம்பர் 23ஆம் திகதி இரண்டாவது எலிசபத் மகாராணியின் மறைவு குறித்த அனுதாபப் பிரேரணை

பாராளுமன்றத்தில் புதிதாக அமைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள “தேசிய சபை” என்ற பெயரில் அறியப்படும் பாராளுமன்றக் குழு தொடர்பான பிரேரணை எதிர்வரும் 20ஆம் திகதி மு.ப 10.30 மணி முதல் பி.ப 5.30 மணிவரை விவாதிக்கப்பட்டு பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்படவிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக தெரிவித்தார்.

சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (14) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டது. செப்டெம்பர் 09ஆம் திகதி வெளியிடப்பட்ட ஒழுங்குப் புத்தகத்துக்கான அனுபந்தத்தில் “தேசிய சபை” தொடர்பான பிரேரணை உள்ளடக்கப்பட்டுள்ளது.

தேசிய சபை தொடர்பான பிரேரணை எதிர்வரும் 20ஆம் திகதி பாராளுமன்றத்தின் அனுமதிக்காக சமர்பிப்பு

  • அரசாங்கத்தின் வருவாயை அதிகரிக்க வேண்டியதன் அவசியம் குறித்த சபை ஒத்திவைப்பு விவாதம் எதிர்வரும் 21ஆம் திகதி
  • செப்டெம்பர் 23ஆம் திகதி வெள்ளிக்கிழமை மு.ப 9.30 மணி முதல் பி.ப 12.30 மணி வரை இரண்டாவது எலிசபத் மகாராணியின் மறைவு குறித்த அனுதாபப் பிரேரணை முன்வைப்பு
  • பாராளுமன்றத்தைப் பார்வையிடுவது தொடர்பில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளைத் தளர்த்த இணக்கம்

எதிர்வரும் 20ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை பாராளுமன்ற அமர்வு நடைபெறவிருப்பதுடன், 23ஆம் திகதி வெள்ளிக்கிழமை தவிர ஏனைய தினங்களில் மு.ப 9.30 முதல் மு.ப 10.30 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 21ஆம் திகதி “அரசாங்கத்தின் வருவாயை அதிகரிக்க வேண்டியதன் அவசியம்” தொடர்பில் ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்புப் பிரேரணைக்கு அமைய மு.ப 10.30 மணி முதல் பி.ப 5.30 மணி வரை விவாதத்தை நடத்துவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டதாக செயலாளர் நாயகம் தெரிவித்தார்.

செப்டெம்பர் 22ஆம் திகதி மு.ப 10.30 மணி முதல் பி.ப 12.30 மணி வரை இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத் தாபனம் (திருத்தச்) சட்டமூலம் (இரண்டாவது மதிப்பீடு) மற்றும் சிவில் விமான சேவை சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதி என்பன விவாதத்தின் பின்னர் நிறைவேற்றப்படவுள்ளன. அதனைத் தொடர்ந்து பி.ப 1.00 மணி முதல் பி.ப 4.30 மணி வரை பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளைத் திருத்துவது தொடர்பான விதப்புரை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

அதன் பின்னர் பி.ப 4.30 மணி முதல் பி.ப 4.50 மணி வரை சபை ஒத்திவைப்பு வேளையின் போதான கேள்விக்கும், பி.ப 4.50 மணி முதல் பி.ப 5.30 மணி வரை எதிர்க்கட்சியினரால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணையை விவாதத்துக்கு எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

செப்டெம்பர் 23ஆம் திகதி வெள்ளிக்கிழமை மு.ப 9.30 மணி முதல் பி.ப 12.30 மணி வரை இரண்டாவது எலிசபத் மகாராணியின் மறைவு குறித்த அனுதாபப் பிரேரணையையும், பி.ப 1.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல குறித்த அனுதாபப் பிரேரணையையும் விவாதத்துக்கு எடுக்க தீர்மானிக்கப்பட்டது.

இதேவேளை, நிலவிய கொவிட் சூழல் மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காகப் பாராளுமன்றத்தைப் பார்வையிடுவதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதன் அவசியம் குறித்து படைக்கலசேவிதர் குழுவின் கவனத்துக்குக் கொண்டுவந்தார். இதற்கமைய முதற்கட்டமாக பாராளுமன்ற அமர்வு தினங்கள் தவிர்ந்த ஏனைய நாட்களில் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பாராளுமன்றத்தைப் பார்வையிட விரும்பும் தரப்பினருக்கு அதற்கான அனுமதியை வழங்குவது குறித்த இணக்கப்பாட்டுக்கு வரவும் முடிந்ததாக செயலாளர் நாயகம் குறிப்பிட்டார்.

எச்.ஈ. ஜனகாந்த சில்வா,
பணிப்பாளர் சட்டவாக்க சேவைகள் / பணிப்பாளர் தொடர்பாடல் (பதில்)
இலங்கை பாராளுமன்றம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.