புதுடெல்லி: டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை, சுகாதாரம், பெண்கள் அதிகாரம் உள்ளிட்ட விவகாரங்களில் பிரதமர் நரேந்திர மோடியின் நடவடிக்கைகள் சிறப்பாக உள்ளன என்று மைக்ரோசாஃப்ட் இணைநிறுவனர் பில் கேட்ஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் டிஜிட்டல் கட்டமைப்பு மிகப் பெரிய அளவில் மேம்பட்டுள்ளது. யுபிஐ பரிவர்த் தனையில் உலக நாடுகளுக்கு இந்தியா முன்னுதாரணமாக விளங்குகிறது. கரோனாவுக்குப் பிறகு யுபிஐ பயன்பாடு பல மடங்கு உயர்ந்துள்ளது.
அதேபோல், இந்திய மக்கள் தொகையில் 94.5 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி முழுமையாக செலுத்தப்பட்டுள்ளது. மாற்று எரிசக்தியை நோக்கிய நகர்வும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் இந்த வளர்ச்சியை பாராட்டிய பில் கேட்ஸ், பல விஷயங்களில் இந்தியா உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாக விளங்குகிறது என்று தெரிவித்தார்.
“உலக மக்கள் தொகையில் பெரும் பகுதியை இந்தியா கொண்டிருக்கிறது. பல விஷயங்களில் இந்தியா உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாக விளங்குகிறது. குறிப்பாக, சுய உதவிக் குழுக்கள் வழியாக பெண்களின் வாழ்க்கையை மேம்படுத்துவது, டிஜிட்டல் கட்டமைப்பு உள்ளிட்டவை ஏனைய நாடுகள் இந்தியாவிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்”என்று அவர் குறிப்பிட்டார்.
டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை, கரோனா தடுப்பூசி, பெண்கள் மேம்பாடு சார்ந்து பிரதமர் நரேந்திர மோடியின் முன்னெடுப்புகளை பில் கேட்ஸ் பாராட்டினார். இந்தியாவின் முன்பு பல்வேறு சவால்கள் இருந்தபோதிலும் சுகாதாரம் மற்றும் வேளாண் துறைக்கு இந்தியா முன்னுரிமை வழங்குவது மகிழ்ச்சி அளிப்பதாக அவர் தெரிவித்தார்.
இந்தியாவின் மாற்று எரிசக்தி முன்னெடுப்புகளைப் பற்றி கூறுகையில், “இந்தியாவில் சோலார் மின்சாரபயன்பாடு அதிகரித்திருப்பது மகிழ்ச்சிஅளிக்கிறது. ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்கள் இதில் முதலீடு செய்வதுமகிழ்ச்சி அளிக்கிறது” என்று குறிப்பிட்டார்.