சென்னை: தனுஷின் நானே வருவேன் பட டீசர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
நானே வருவேன் செப்டம்பரில் வெளியாகவுள்ள நிலையில், தனுஷ் அடுத்து கேப்டன் மில்லர் படத்தில் நடிக்கவுள்ளார்.
அருண் மாதேஸ்வரன் இயக்கும் இந்தப் படத்தில் முன்னணி நடிகர்கள் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தொடர்ந்து மாஸ் காட்டும் தனுஷ்
கர்ணன் படத்திற்குப் பிறகு தனுஷின் படங்கள் எதுவும் திரையரங்குகளில் வெளியாகாமல் இருந்த நிலையில், கடந்த மாதம் திருச்சிற்றம்பலம் வெளியாகி சூப்பர் கம்பேக் கொடுத்தது. இதனைத் தொடர்ந்து இந்த மாதம் ‘நானே வருவேன்’ படமும் வெளியாகவுள்ளது. மேலும், வாத்தி படமும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தடுத்து தனுஷின் படங்கள் திரையரங்குகளில் வெளியாவது, அவரது ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது. இந்நிலையில், தற்போது நானே வருவேன் படத்தின் மிரட்டலான டீசர் வெளியாகி, ட்ரெண்டிங்கில் உள்ளது.
தனுஷ் எடுக்கும் கேப்டன் மில்லர் அவதாரம்
இதனிடையே தனுஷ் நடிக்கும் ‘கேப்டன் மில்லர்’ படம் குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் கேப்டன் மில்லர் படத்தை, .சாணி காகிதம், ராக்கி படங்கள் மூலம் கவனம் ஈர்த்த அருண் மாதேஸ்வரன் இயக்கவுள்ளார். இந்தப் படம் 1930களின் கதைக்களத்தில் பீரியட் படமாக உருவாகிறது. மேலும், அதிகமான பொருட் செலவில் தயாராகவுள்ள ‘கேப்டன் மில்லர்’ பான் இந்தியா படமாக வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.
அடுத்த மாதம் சூட்டிங் ஸ்டார்ட்?
கேப்டன் மில்லர் படத்தின் மோஷன் போஸ்டர் கடந்த ஜூலை மாதம் வெளியாகி வைரலானது. இந்நிலையில், கேப்டன் மில்லர் படப்பிடிப்பு அக்டோபர் 7ம் தேதி தொடங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், படத்தின் படப்பிடிப்பு தென்காசியில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் நடக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ள்ளது. இந்த மாதம் 21ம் தேதி கேப்டன் மில்லர் படத்தின் பூஜை நடக்கும் எனவும், அப்போது மேலும் சில தகவல்கள் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கேப்டன் மில்லரில் இணைந்த பிரபலங்கள்
இந்நிலையில், கேப்டன் மில்லர் படத்தில் மலையாள நடிகர் சுமேஷ் மூர் கமிட் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது. அதேபோல், இன்னொரு முக்கியமான கேரக்டரில் சந்தீப் கிஷன் நடிக்கலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வரும் சந்தீப் கிஷன், லோகேஷ் கனகராஜ்ஜின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், லோகேஷ் முதலில் இயக்கிய ‘மாநகரம்’ படத்தில் சந்தீப் கிஷனும் ஒரு ஹீரோவாக நடித்திருந்தார்.