சென்னை: தமிழகத்தில் எச்1என்1 இன்ஃப்ளூவன்சா காய்ச்சல் காரணமாக கடந்த ஒரு மாதத்தில் 8 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக நம்பத்தகுந்த மருத்துவத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக எச்1என்1 இன்ஃப்ளூவன்சா காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக, இந்தக் காய்ச்சலால் குழந்தைகள் அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. இதனைத் தொடர்ந்து இன்று எழும்பூர் குழுந்தைகள் நல மருத்துவமனை ஆய்வு செய்த மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தமிழ்நாட்டில் இன்ஃப்ளூவன்சா காய்ச்சலால் 282 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் அரசு மருத்துவமனைகளில் 13 பேரும், தனியார் மருத்துவமனையில் 215 பேரும், வீட்டுத் தனிமையில் 54 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்” என்று தெரிவித்தார்.
மேலும், “சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 637 குழந்தைகளில் 129 பேர் மட்டும்தான் காய்ச்சல் சம்பந்தமாக சிகிச்சையில் உள்ளளனர். இதில் 18 பேருக்கு மட்டும்தான் டெங்கு காய்ச்சல் உள்ளது. மீதமுள்ள 121 பேருக்கு சாதாரணக் காய்ச்சல் மட்டுமே உள்ளது” என்றார்.
இந்நிலையில், தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் எச்1என்1 இன்ஃப்ளூவன்சா காய்ச்சல் காரணமாக 8 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக தகவல் கிடைத்துள்ளது. தமிழக மருத்துவத் துறையின் உயர் அதிகாரி ஒருவர் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில் இன்று மருத்துவத் துறையின் சார்பில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் எச்1என்1 இன்ஃப்ளூவன்சா வைரஸ் நோய் குறித்து ஒரு சுற்றறிக்கை ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில், ‘இந்தக் காய்ச்சலுக்கு திடீர் வறட்டு இருமல், தொண்டை வலி மற்றும் 100.4 டிகிரி வெப்பநிலையை 10 நாட்களில் அடைதல் , தலைவலி, மூக்கடைப்பு மற்றும் உடல் வலி , உடல் சோர்வு ஆகியவை அறிகுறிகள். இந்த அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். அனைத்து மருத்துவமனையிலும் காய்ச்சலுக்கான சிகிச்சை வழங்கத் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குறிப்பாக லேசான அறிகுறிகள் கொண்டவர்களை 48 மணி நேரத்திற்கு மருத்துவ கண்காணிப்பில் வைக்க வேண்டும். 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் , கர்ப்பிணிகள், 5 அல்லது 5 வயதுக்குட்பட்ட பச்சிளம் குழந்தைகள் , தீவிரமான சுவாசப் பிரச்சினை கொண்டவர்கள் , நீரழிவு மற்றும் உடல் பருமன் கொண்டவர்கள் என எளிதில் நோய்த் தொற்றுக்கு ஆளாகக் கூடிய நபர்களுக்கு அறிகுறிகள் இருந்தால் அவர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டும்.
இந்த வகை பாதிப்புடன் சிறுநீர் கழிப்பதில் பிரச்சினை, ரத்தத்தின் ஆக்சிஜன் அளவு 90-க்கும் கீழ் குறைதல் ஆகிய பிரச்சினைகள் கண்டறியப்படும் பட்சத்தில் இன்ஃப்ளூவன்சா பரிசோதனை மேற்கொண்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை வழங்க வேண்டும்’ என அதற்குரிய வழிகாட்டுதல்களும் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிகுறிகள் என்ன?
- இன்ஃப்ளூவன்சா வைரஸ் காய்ச்சல் குழந்தைகளைத் தான் அதிகம் பாதிக்கும்.
- ஜலதோஷம், மிக அதிக காய்ச்சல், விடாமல் ஏற்படும் இருமல் ஆகியவை இதன் அறிகுறியாகும்.
- இந்த காய்ச்சல் சுவாச மண்டலத்தை அதிகம் பாதிக்கும்.
- உடல் வலி, தலைவலி, சோர்வு, தொண்டை வறட்சி, வாந்தி , வயிற்று வலி போன்றவைகளும் இருக்கும்.
சிகிச்சை
- இன்ஃப்ளூவன்சா வைரஸ் காய்ச்சல் முதல் 4 நாட்களில் குணமாகிவிடும்
- சிலருக்கு மட்டும் இருமலுடன் ஒரு வாரம் வரை நீடிக்க வாய்ப்பு உள்ளது.
- இதற்கு ஏற்கனவே தடுப்பூசி உள்ளது.
பாதுகாப்பு வழிமுறைகள்
- குழந்தைகளுக்கு இதற்கான தடுப்பூசி கட்டயாம் செலுத்த வேண்டும்.
- வெளியில் சென்று வந்த பிறகு கைகளை கழுவிட்டு அல்லது குளித்து விட்டுதான் குழந்தைகளை தூக்க வேண்டும்.
- வீட்டில் யாருக்காவது காய்ச்சல் இருந்தால் அவர் உட்பட அனைவரும் முக்கவசம் அணிய வேண்டும்.
- காய்ச்சல் உள்ளவர்கள் கட்டாயம் தனிமையில் இருக்க வேண்டும்.
- தொடக்க நிலையிலியே மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்
- காய்ச்சல் பாதிப்புக்கு சுயமாக மருந்து எடுத்துக் கொள்ளக் கூடாது.