தமிழக அரசு பள்ளிகளில் 1.14 லட்சம் மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் தொடக்கம்: மதுரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்; பசியை போக்க எந்த தியாகமும் செய்ய தயார் என பேச்சு

மதுரை: தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் 1.14 லட்சம் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை மதுரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது அவர், பசித்த வயிறுகளுக்கு உணவாக, தவித்த  வாய்க்குத் தண்ணீராக, திக்கற்றவர்களுக்குத் திசைகாட்டியாக,  யாருமற்றவர்களுக்கு ஆறுதலாக இருக்கப்போகும் கருணை வடிவான திட்டம்தான் இந்த  காலை உணவு வழங்கும் திட்டம். மாணவர்களின் பசியை போக்க எந்த தியாகமும் செய்ய தயார் என்று உணர்ச்சிபூர்வமாக பேசினார். தமிழகத்திலேயே முதல்முறையாக மதுரை கீழ அண்ணாத்தோப்பில் உள்ள மதுரை மாநகராட்சி ஆதிமூலம் ஆரம்பப்பள்ளியில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு, முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டத்தை நேற்று காலை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். பின்னர் மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவை ரசித்து சாப்பிட்டார். மாணவ, மாணவிகளுக்கும் ஊட்டி மகிழ்ந்தார். உணவும் பரிமாறினார்.

பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: பசித்த வயிறுகளுக்கு உணவாக, தவித்த வாய்க்குத் தண்ணீராக, திக்கற்றவர்களுக்குத் திசைகாட்டியாக, யாருமற்றவர்களுக்கு ஆறுதலாக இருக்கப்போகும் கருணை வடிவான திட்டம்தான் இந்த காலை உணவு வழங்கும் திட்டம். பள்ளிக்குப் பசியோடு படிக்க வரும் பிள்ளைகளுக்கு முதலில் உணவு வழங்கிய பிறகு, வகுப்பறைக்குச் செல்லக் கூடிய வசதியை ஏற்படுத்தித் தந்திருக்கிறோம். இந்தாண்டு தமிழகத்தில் வரலாறு காணாத அளவு நெல், தானிய உற்பத்தி உச்சம் கண்டிருக்கிறது. ஏழை மக்களுக்கு மலிவு விலையில் உணவு கிடைத்திட வேண்டும் என முதன்முதலில் கூறியவர் பேரறிஞர் அண்ணா. அவருடைய பிறந்தநாளில், மகத்தான திட்டத்தைத் தொடங்கி வைத்து இருக்கிறோம்.

102 ஆண்டுகளுக்கு முன்னால், செப். 16ம் தேதி நீதிக்கட்சித் தலைவர்களுள் ஒருவரான பி.டி.தியாகராயர் சென்னை மாநகராட்சியில் குழந்தைகளுக்கு மதிய உணவுத் திட்டம் அறிமுகப்படுத்தும் தீர்மானத்தை இயற்றினார். ஒரு நூற்றாண்டுக்குப் பின்னர் காலை உணவுத் திட்டம் என தூங்கா நகரமான மதுரையின் வைகை ஆற்றங்கரையில் அடுத்த பரிமாணத்தை அடைந்து விரிவடைந்திருக்கிறது. காலை உணவு வழங்குவதால் கற்றல் திறன் மேம்பட்டு, மாணவர் வருகையும் அதிகரிப்பது ஆய்வு முடிவுகளில் தெரிகிறது. ஏழை, எளியோர் வீட்டுப்பிள்ளைகள், ஒடுக்கப்பட்ட குடும்பத்துப்பிள்ளைகள் எந்த காரணத்திற்காகவும் பள்ளிக்குச் செல்ல தடை வரக் கூடாது என்பதற்காகவே திராவிட இயக்கம் தொடங்கப்பட்டது.

வறுமையோ, சாதியோ எதுவும் ஒருவரது கல்விக்குத் தடையாக இருக்கக் கூடாது என்று தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும், முத்தமிழறிஞர் கலைஞரும் நினைத்தனர். அவர்கள் வழித்தடத்தில் வந்த நான் அவர்களது கனவுகளை நிறைவேற்றும் இடத்துக்கு வந்து செயல்படுத்திக்கொண்டு வருகிறேன். திராவிட இயக்கத்தின் தாய் அமைப்பான நீதிக்கட்சியின் தலைவர் பி.டி.தியாகராயர், சென்னை மாநகராட்சியின் மேயராக இருந்தபோது, ஆயிரம் விளக்கு மாநகராட்சிப் பள்ளிப் பிள்ளைகளுக்கு 1920ம் ஆண்டு மதிய உணவை வழங்கினார். இந்தியா விடுதலை அடைவதற்குச் சில மாதங்களுக்கு முன்பு நிதி நெருக்கடியால் ஆங்கிலேய அரசால் மதிய உணவுத்திட்டம் நிறுத்தப்பட்டது. பிறகு 1955ல் முதலமைச்சராக இருந்த காமராசர், மதிய உணவுத் திட்டத்தை தொடங்கினார். கடந்த 1971ல் ஊட்டச்சத்துத் திட்டத்தை முதல்வர் கலைஞர் கையில் எடுத்தார். 1975ல் மாநில அரசின் நிதியில், ஒருங்கிணைந்த ஊட்டச்சத்துத் திட்டத்தை கலைஞர் மாநிலம் முழுவதும் நடத்தினார்.

எம்ஜிஆர் சத்துணவுத் திட்டத்துக்கு கூடுதலான நிதியை ஒதுக்கீடு செய்தார். கலைஞர் 1989ல் ஆட்சிக்கு வந்தார். வந்தவுடனே சொன்னார். சத்துணவுத் திட்டத்தை நான் நிறுத்திடுவேன், நிறுத்திடுவேன் என்று சொன்னார்கள். ஆனால், உண்மையான சத்துணவை வழங்கப்போகிறேன் என்று சொல்லி, 1989ல் வாரம்தோறும் ஒரு முட்டை, பிறகு இரு முட்டைகள் வழங்குவதாக அறிவித்தார். 2007ல் வாரத்துக்கு 3 முட்டைகள் வழங்கினார். அத்துடன் கொண்டைக்கடலை, பச்சைப்பயிறு, வேகவைத்த உருளைக்கிழங்கும் சேர்த்துக் கொடுத்தார். 2010ல் வாரம் 5 நாட்களும், சனி, ஞாயிறு தவிர, முட்டை வழங்கியவர் முதல்வர் கலைஞர். முட்டை சாப்பிடாதவர்களுக்கு வாழைப்பழம் வழங்கினார். ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் கலவை சாதம் வழங்கினார். இவை அனைத்தும் மதிய உணவுத்திட்டங்கள்.

சென்னையில் மாநகராட்சி, அரசு பள்ளிகளை ஆய்வு செய்தேன். ஒருமுறை ஒரு பள்ளியின் பிள்ளைகள் சோர்வாக இருந்தனர். கேட்டதற்கு, ‘காலையில் எப்போதும் சாப்பிடுவதில்லை’ என்றனர். அப்போதே காலை உணவுத் திட்டத்தை தொடங்க முடிவு எடுத்தேன். பசியோடு பள்ளிக்கு வரும் பிள்ளைகளை பட்டினியாக வைத்து பாடம் சொல்லித் தரக் கூடாது என்று நினைத்தே இத்திட்டம் உருவானது. முதல்கட்டமாக 1 லட்சத்து 14 ஆயிரம் குழந்தைகளுக்கு உணவு வழங்கப்படுகிறது. 1,545 பள்ளிகளின் குழந்தைகள் பயனடைவர். ஒரு குழந்தைக்கு நாள் ஒன்றுக்கு ரூ.12.75 செலவிடப்படுகிறது. உண்மையில் இது செலவல்ல. நமது அரசின் கடமை. என் கடமையும் தான். படிப்படியாக விரிவுபடுத்தி, திட்டம் முழுமையாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

பசிப்பிணி நீங்கிவிட்டால், மனநிறைவுடன் பிள்ளைகள் கல்வி கற்பார்கள். மனதில் பாடங்கள் பதியும். பள்ளிக்கு ஆர்வத்துடன் வருவார்கள். சீரான வருகைப்பதிவு இருக்கும். தமிழ்நாட்டின் கல்வி விகிதம் அதிகமாகும். தமிழ்நாட்டு இளைஞர்கள் அறிவாற்றல் பொருந்தியவர்களாக உயர்வர். இப்படி எத்தனையோ நன்மைகளை இம்மாநிலம் அடையப் போகிறது. கல்வி, மருத்துவத்துக்காகவும், பசிப்பிணி போக்கவும் உருவாக்கப்படும் திட்டங்கள் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவை. கலைஞர் மகனின் அரசு, கருணையின் வடிவான அரசாகச் செயல்படும் என உறுதி அளிக்கிறேன். அரசு அதிகாரிகள், ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.

அரசு தாயுள்ளத்தோடு இத்திட்டத்தைத் தொடங்கி இருக்கிறது. நீங்களும் தாயுள்ளத்தோடு இத்திட்டத்தை பின்பற்ற வேண்டும். உங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கு எத்தகைய கவனத்தோடும், கனிவோடும் உணவு வழங்குவீர்களோ, அதைவிடக் கூடுதல் கவனத்தோடும், கனிவோடும் வழங்க வேண்டும். காலை, மதியம் உணவு வழங்குவதால் மாணவர்கள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் படிக்க வேண்டும். படிப்பு ஒன்று தான் யாராலும் பறிக்க முடியாத சொத்து. உங்களது மற்ற கவலைகள், மற்ற தேவைகளை நிறைவு செய்யத்தான் இந்த அரசு செய்து கொண்டிருக்கிறது. நான் இருக்கிறேன். மாணவர்களாகிய நீங்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்துங்கள். நீங்கள் படித்து அறிவார்ந்த சமூகமாக முன்னேற இருப்பவர்கள். எந்தக் காரணத்தைக் கொண்டும் கல்வியை விட்டு விலகிச் சென்று விடாதீர்கள். விலகவும் நான் விடமாட்டேன்.

பள்ளிக் கல்வி, உயர்கல்வி, பட்டப்படிப்பு, ஆராய்ச்சிப் படிப்புகள் எனக் கலை, அறிவியல் அனைத்துத் துறைகளிலும் மாணவர்கள் முன்னேற வேண்டும். நம் தமிழ்ச்சமூகம் இன்னும் முன்னேறும். தமிழ்ச் சமூகத்தினுடைய வறுமையை அகற்ற, குழந்தைகளின் பசியைப் போக்க எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எ.வ.வேலு, பெரியகருப்பன், கீதா ஜீவன், பி.மூர்த்தி, சி.வி.கணேசன், பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன், மகேஷ் பொய்யாமொழி, மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், துணைமேயர் நாகராஜன், எம்பிக்கள் சு.வெங்கடேசன், கிரிராஜன், கலாநிதி வீராசாமி, எம்எல்ஏக்கள் வெங்கடேசன், தமிழரசி, புதூர் பூமிநாதன், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஷம்பு கல்லோலிகர், ஊரக வளர்ச்சித் துறை முதன்மை செயலாளர் அமுதா, பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா, சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை முதன்மைச் செயலாளர் உதயச்சந்திரன், மதுரை கலெக்டர் அனிஷ் சேகர், மாநகராட்சி கமிஷனர் சிம்ரன்ஜீத் சிங், துணை கமிஷனர் முஜ்பூர்ரகுமான் உள்பட பலர் பங்கேற்றனர்.

* ‘ஆதிமூலமும் அண்ணா தோப்பும்…’
முதல்வர் பேசும்போது, ‘‘நெல்பேட்டை சமையற்கூடத்தில் தயாரான உணவுகள் பிஞ்சுக் குழந்தைகளைத் தேடிப் பள்ளிகளுக்குச் செல்கின்றன. இந்த சமூகத்தில் ஒடுக்கப்பட்ட, விளிம்பு நிலை மக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களின் ஆதிமூலத்தை அறிந்து தீர்வுகள் காணப்பட வேண்டும். அந்த முயற்சிகளின் ஒரு பகுதியாகத்தான் காலை உணவுத் திட்டத்தை ஆதிமூலம் தொடக்கப்பள்ளியில் இருந்து தொடங்கியிருக்கிறோம். மேலும் இப்பள்ளி அமைந்துள்ள பகுதியின் பெயரை பார்த்தீர்களா? கீழ அண்ணா தோப்பு. என்ன பொருத்தம் பாருங்கள். அதிலும் அண்ணா பெயர் அடங்கியிருக்கிறது. பேரறிஞர் அண்ணாவால் வளர்த்தெடுத்திருக்கக்கூடிய தம்பிகள் நாம்’’ என்றார்.

*ரூ.1க்கு இட்லி தந்த பாட்டி கவுரவிப்பு
கோவை வடிவேலன்பாளையத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ரூ.1க்கு இட்லி கொடுத்த கமலாத்தாள் பாட்டிக்கு  சால்வை அணிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கவுரவித்தார். மேலும், ‘நூற்றாண்டு கண்ட கல்விப்புரட்சி’ என்ற புத்தகத்தை முதல்வர் வெளியிட்டார். முதல் பிரதியை முதல்வரிடமிருந்து, கமலாத்தாள் பெற்றுக் கொண்டார்.  விழா நடந்த, பள்ளியில் இருந்த பார்வையாளர் குறிப்பு புத்தகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘‘திராவிட மாடல் ஆட்சியாக செயல்படும் நமது ஆட்சியில் இன்று துவங்கியுள்ள முதலமைச்சரின் காலை உணவு திட்டம் வெற்றி பெற எனது வாழ்த்துகள்’’ என எழுதி கையெழுத்திட்டார்.

* ‘முதல்வருடன் சாப்பிட்டது ரொம்ப சந்தோஷமா இருக்கு…’: குழந்தைகள் குதூகலம்
காலை சிற்றுண்டி திட்டத்தை துவக்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார். முதல்வருக்கு அருகில் அமர்ந்து உணவருந்திய 2ம் வகுப்பு மாணவி ரித்திகா, 4ம் வகுப்பு மாணவர்கள் முகுந்தன், அவினாஷ் மற்றும் 5ம் வகுப்பு மாணவி கிருபனா உள்ளிட்டோர் பெருமகிழ்ச்சி அடைந்தனர்.
* மதுரை செல்லூரை சேர்ந்த முனீஸ்வரன் – கார்த்திகா தம்பதி மகள் ரித்திகா கூறுகையில், ‘‘மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டிற்கு ராஜாவாக இருக்கிறார். உங்க அப்பா, அம்மா எங்கே இருக்காங்கன்னு கேட்டார். அம்மா வீட்டில் இருக்காங்க, அப்பா இல்லைன்னு சொன்னேன். அப்பா என்ன வேலை செய்தாங்கன்னு கேட்டாரு, எந்த வகுப்பு படிக்கிறாய்னு கேட்டாங்க.. இரண்டாம் வகுப்பு படிக்கிறேன்னு சொன்னேன். உனக்கு ஊட்டி விட்ட சாப்பாடு எப்படி இருந்ததுன்னு கேட்டாங்க. நான் ரொம்ப நல்லா இருக்குன்னு சொன்னேன். எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு’’ என்றார்.
* மதுரை செல்லூரை சேர்ந்த சிவக்குமார் – ஜெயஸ்ரீ தம்பதியின் மகள் கிருபனா கூறுகையில், ‘‘எனது பெயரை கேட்டதற்கு கிருபனா என்றேன். நல்லா படிப்பாயா? என்று கேட்டாங்க.. முதல் ரேங்க் வாங்குவேன்னு சொன்னதும் ரொம்ப சந்தோஷப்பட்டாங்க.. சாப்பாடு எப்படி இருக்குதுன்னு கேட்டாங்க… ரொம்ப நல்லா இருக்குதுன்னு சொன்னேன்’’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.