தமிழ் மொழியை கற்க மற்ற மாநிலத்தினரும் ஆர்வம் – ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம்

சென்னை: தமிழ் மொழியைக் கற்க மற்ற மாநிலத்தினரும் ஆர்வமாக உள்ளனர் என ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம் தெரிவித்தார்.

சென்னை தரமணியில் உள்ள செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அந்நிறுவனத்தில் உள்ள தமிழறிஞர்கள், ஆய்வாளர்கள் மற்றும் பணியாளர்களுடன் ஆளுநர் கலந்துரையாடினார்.

நிறுவனத்தின் இயக்குநர் பேராசிரியர் பி.சந்திரசேகரன், செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் மேற்கொண்டு வரும் பணிகள், எதிர்கால திட்டங்கள் குறித்து காணொலி காட்சி வாயிலாக ஆளுநருக்கு விளக்கினார்.

தொடர்ந்து, நிறுவனத்தின் பல்வேறு வசதிகள், கட்டமைப்புகளை ஆளுநர் பார்வையிட்டார். அப்போது ஆளுநர் கூறியதாவது:

இந்தியாவின் அடையாளத்தை உருவாக்குவதில் தமிழின் பங்களிப்பு முக்கியமானது. தமிழ் மொழியின் வளம் சமூகத்தின் நாகரிக வளர்ச்சியின் பிரதிபலிப்பாகும். இந்தியாவின் விரிவான மறுமலர்ச்சிக்கு, தமிழ் இலக்கியம் மற்றும் கலாச்சார ஞானம் போன்றவற்றை, இந்தியர் அனைவரும் கற்கும் வகையில் வழிவகை செய்வதன் மூலம், தமிழகத்துக்கு அப்பால், தமிழை பரவிட செய்ய வேண்டும். நாட்டின் சில மாநிலங்கள் தமிழ் மொழியை தங்களது பள்ளிகளில் 3-ம் மொழியாக அறிமுகப்படுத்த ஆர்வமாக உள்ளன.

தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், தமிழ் அல்லாத மாணவர்களை ஈர்க்கக்கூடிய வகையில், எளிய முறை தமிழ் கற்றல் அணுகுமுறைகளை உருவாக்க வேண்டும். அவை ஆக்கப்பூர்வமாகவும், எளிதாகவும் தமிழ் அல்லாதவர்களை கவரும் வகையிலும் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து, செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன வளாகத்தில் ஆளுநர் மரக்கன்று நட்டார். இந்த நிகழ்வில் நிறுவனத்தின் துணை தலைவர் பேராசிரியர் சுந்தரமூர்த்தி, துணை வேந்தர் என்.பஞ்சநாதன், தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழக பேராசிரியர்கள், தமிழ் அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.