குலசேகரம்: திருவட்டாரை அடுத்துள்ள ஆற்றூர் சந்திப்பு மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியாகும். இங்கு கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், தொழில் நிறுவனங்கள், தினசரி சந்தை மற்றும் மீன் சந்தைகள் செயல்படுகின்றன. இதனால் இங்கு எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். இந்தநிலையில் இந்த பகுதியில் கடந்த 3 மாதமாக கேரளா பதிவெண் கொண்ட ஜீப் ஒன்று அனாதையாக நின்று கொண்டிருக்கிறது. அதில் எழுதப்பட்டிருந்த பெயரும் மலையாளத்தில் உள்ளது. முதலில் இது பழுதாகி நிற்கிறது என்று பொதுமக்கள் நினைத்தனர். ஆனால் 3 மாதம் ஆன பின்னரும் ஜீப்பை எடுத்து செல்ல யாரும் வரவில்லை. நீண்ட நாட்களாக ஜீப் சாலையோரம் அனாதையாக நிற்பதால் குடிமகன்களின் புகலிடமாக மாறியுள்ளது. தற்போது இரவு நேரங்களில் குடிமகன்களுக்கு பாராகவும், கஞ்சா கும்பலுக்கு மறைவிடமாகவும் ஆகி விட்டது.
இதனால் அந்த பகுதி வழியாக நடந்து செல்லும் பள்ளி, கல்லூரி மாணவிகள், பெண்கள் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து திருவட்டார் காவல் நிலையத்திற்கு அப்பகுதி பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். இருப்பினும் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் ஜீப் அந்த பகுதியில் தொடர்ந்து நின்று கொண்டிருப்பதால் இது திருட்டு ஜீப்பா? அல்லது அரிசி கடத்தல் அல்லது போதை பொருள் விற்பனை செய்யும் கும்பலை சேர்ந்ததா? என்ற சந்தேகம் பொதுமக்களுக்கு எழுந்துள்ளது. எனவே இதுகுறித்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜீப்பை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் ேகாரிக்கை விடுத்துள்ளனர்.