ஜோகன்னஸ்பர்க்,
தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் மார்க் பவுச்சர் கடந்த 3 ஆண்டுகளாக இருந்து வருகிறார். அவரது ஒப்பந்த காலம் 2023-ம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பை போட்டி வரை உள்ளது.
இந்த நிலையில் அடுத்த மாதம் 16-ந் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்கி நடக்கும் 20 ஓவர் உலக கோப்பை போட்டியுடன் பயிற்சியாளர் பதவியில் இருந்து ஒதுங்க பவுச்சர் முடிவு செய்துள்ளார். அணி வீரர்கள் கூட்டத்தின் போது தனது முடிவை அவர் வெளியிட்டார்.
இது குறித்து தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி போலெட்சி மோஸ்கி கூறுகையில், ‘பவுச்சரின் முடிவு எங்களுக்கு ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் இருந்தது. வேறு சில விஷயங்களில் கவனம் செலுத்த விரும்புவதாக எங்களிடம் தெரிவித்தார். ஆனாலும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு தென்ஆப்பிரிக்க அணியை வழிநடத்த இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பல முன்னணி வீரர்கள் ஓய்வால் தடுமாறிய போது, அடுத்த தலைமுறைக்காக வலுவான அடித்தளம் அமைக்க உதவிய பவுச்சருக்கு நன்றி கடன்பட்டுள்ளோம். அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் புதிய அத்தியாயம் சிறப்பாக அமைய வாழ்த்துகள்’ என்றார்.
தென்ஆப்பிரிக்காவில் அடுத்த ஆண்டு ஜனவரியில் 20 ஓவர் லீக் கிரிக்கெட் போட்டி அறிமுகம் ஆகிறது. இதில் எம்.ஐ. கேப்டவுன் அணியின் பயிற்சியாளர் பதவியை பவுச்சர் குறிவைத்துள்ளதாக தெரிகிறது. பவுச்சரின் பயிற்சியின் கீழ் தென்ஆப்பிரிக்க அணி 11 டெஸ்டுகளில் வெற்றி பெற்றிருக்கிறது. இதில் உள்நாட்டில் இந்தியாவுக்கு எதிரான தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியதும் அடங்கும்.