டென்னிஸ் லெஜண்ட் ரோஜர் ஃபெடரர் ஓய்வை அறிவித்துள்ளார். 6 ஆஸ்திரேலிய ஓப்பன், ஒரு பிரெஞ்ச் ஓப்பன், 8 விம்பிள்டன், 5 யு.எஸ் ஓப்பன் என 20 கிராண்ட்ஸ்லாம் டைட்டில்களை வென்ற முதல் டென்னிஸ் வீரர் என்ற பெருமைக்குரியவர் ஃபெடரர். அவரின் ஓய்வுச் செய்தி இதுதான்:
“என் டென்னிஸ் குடும்பத்துக்கும், அதைத் தாண்டிய எல்லோருக்கும் வணக்கம்! இத்தனை ஆண்டுகளில் டென்னிஸ் எனக்கு அளித்த பரிசுகளில் மிகவும் மகத்தானது, நான் சந்தித்த மனிதர்களின் அன்புதான். நண்பர்கள், சக போட்டியாளர்கள், ரசிகர்கள் எல்லோரும் இந்தப் பயணத்தை உயிர்ப்பாக்கினார்கள். உங்களுடன் ஒரு செய்தியைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
கடந்த மூன்று ஆண்டுகளாக காயங்களும் ஆபரேஷன்களும் எனக்குப் பெரும் சவாலைத் தந்தன. முழு உடல் தகுதியுடன் மீண்டும் மைதானத்துக்கு வர நான் கடுமையாக உழைத்தேன். ஆனால், முதுமையின் சுவடுகள் படிந்த உடல், தெளிவாக எனக்கு என் எல்லையை உணர்த்தியது. எனக்கு 41 வயதாகிறது. கடந்த 24 ஆண்டுகளில் 1,500-க்கும் மேற்பட்ட போட்டிகளில் ஆடிவிட்டேன். நான் கனவு கண்டதைவிட அதிக கருணையுடன் டென்னிஸ் என்னை நடத்தியிருக்கிறது. என் ஓய்வுக்காலம் நெருங்கிவிட்டதை நான் புரிந்துகொண்டேன்.
அடுத்த வாரம் ஆட இருக்கும் லேவர் கப் போட்டிகள்தான் எனது கடைசி ஏ.டி.பி டென்னிஸ் போட்டி. எதிர்காலத்தில் நான் டென்னிஸ் ஆடலாம். ஆனால் கிராண்ட்ஸ்லாம் போன்ற போட்டிகளில் பங்கேற்க மாட்டேன். கசப்பு மருந்தை சுவைப்பது போன்ற முடிவுதான் இது. டென்னிஸ் எனக்குக் கொடுத்த அத்தனை அனுபவங்களையும் இனி இழந்துவிடுவேன்.
ஆனால், நான் கொண்டாடவும் நிறைய விஷயங்கள் உள்ளன. இந்தப் பூமியிலேயே அதிர்ஷ்டசாலிகளில் ஒருவனாக என்னை நினைக்கிறேன். எனக்கு டென்னிஸ் அபூர்வ திறமையாக வாய்த்தது. கற்பனை செய்ய முடியாத அளவுக்கு உச்சம் தொட்டேன். நான் நினைத்ததை விட நீண்ட காலம் விளையாடினேன்.
இந்த நேரத்தில் என் மனைவி மிர்காவுக்கு நன்றி சொல்ல வேண்டும். அபூர்வமான பிறவி அவள். ஒவ்வொரு நிமிடமும் என்னோடு வாழ்கிறாள். ஒவ்வொரு ஃபைனலின்போதும் என்னை மனதளவில் தயார்படுத்துவாள். 8 மாத கர்ப்பிணியாக இருந்தபோதும் கேலரிக்கு வந்து என் விளையாட்டை ரசித்து உற்சாகப்படுத்துவாள். நான் தந்த சிரமங்களைத் தாங்கிக்கொண்டு என் குழுவுடன் 20 ஆண்டுகள் பயணம் செய்தாள். எனக்கு ஆதரவு தந்த அற்புதமான என் நான்கு குழந்தைகளுக்கும் நன்றி.
புதிய இடங்களைத் தேடி அனுபவம் பெறவும், இனிமையான ஞாபகங்களைச் சேகரிக்கவும் என் மிச்ச வாழ்க்கையைச் செலவிடுவேன்.”