கேரள மாநிலம் கோட்டயம், சிங்கவனம் பகுதியை சேர்ந்தவர் அபிலாஷ் சாக்கோ. இவர் கத்தாரில் கிராபிக்ஸ் டிசைனராக பணிபுரிந்து வருகிறார். அபிலாஷ் சாக்கோ, சௌமியா தம்பதியினருக்கு இரு பிள்ளைகள் உள்ளனர்.
இதில் இவர்களது இரண்டாவது மகளான வின்சா மரியம் ஜேக்கப் என்ற நான்கு வயது குழந்தை கத்தாரில் உள்ள கிண்டர் கார்டன் என்ற பள்ளியில் படித்து வந்தார்.
இந்நிலையில், சிறுமி வின்சா மரியம் தனது நான்காவது பிறந்தநாளன்று வழக்கம்போல பள்ளிக்கு சென்றுள்ளார். ஆனால் எதிர்பாராதவிதமாக அச்சிறுமி பள்ளி பேருந்திலேலே உறங்கியுள்ளார். இதனால் பள்ளியில் இறங்காமல் பேருந்தின் உள்ளேயே அச்சிறுமி இருக்கவேண்டிய நிலை ஏற்பட்டது.
சிறுமி பேருந்தின் உள்ளே உறங்கிக்கொண்டிருந்ததை கவனிக்காத பள்ளி வாகன ஓட்டுநர், பேருந்தின் கதவு, ஜன்னல்களை பூட்டிவிட்டு சென்றுள்ளார். இதனால் அச்சிறுமி மூச்சுவிட சிரமப்பட்டுள்ளார். பின்னர் சற்று நேரத்தில் மூச்சு திணறி மயங்கியும் உள்ளார்.
அதன்பின்னர் சில மணி நேரங்கள் கழித்து மதியம் உணவு வேளையில் வாகனத்திற்கு திரும்பிய ஓட்டுநர் பேருந்தின் உள்ளே சிறுமி ஒருவர் மயங்கிய நிலையில் இருந்ததை கண்டுள்ளார்.
பின்னர் தகவல் தெரிந்து வந்த பள்ளி நிர்வாகத்தினர் உடனடியாக அச்சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர்.
ஆனால் அந்த சிறுமி மருத்துவமனைக்குச் செல்வதற்குள்ளேயே இறந்துவிட்டார். பின்னர் இது குறித்து விசாரித்த கத்தார் அரசு, பள்ளி நிர்வாகம் மற்றும் பள்ளி வாகன டிரைவரின் கவனக்குறைவால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டதாக கூறி அதிரடியாக அந்தப் பள்ளியை மூடியுள்ளது.
இந்த நிலையில் இன்று நெடும்பாசேரி விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்ட குழந்தையின் உடலை பெற்றுக்கொண்ட உறவினர்கள் மற்றும் பெற்றோர் கேரளாவில் உள்ள தங்களது வீட்டின் முன்னால் அடக்கம் செய்தனர்.
தனது நான்காவது பிறந்த நாளன்று மூச்சுத் திணறி பரிதாபமாக பலியாகிய இந்த குழந்தையின் உயிர் இழப்பு கேரளாவிலும் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.