பீகாரில் தற்போது மகாபந்தன் கூட்டணியின் ஆட்சியில் முதல்வராகப் பதவி வகிக்கும் நிதிஷ் குமார், இதற்குமுன் ஆட்சிக்கட்டிலிருந்த ஜனதா தளம்-பா.ஜ.க கூட்டணியை முறித்ததிலிருந்தே, தற்போதைய கூட்டணிமீது பா.ஜ.க தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களை வைத்து வருகிறது.
கடந்த செவ்வாய் அன்று நடந்த பெகுசராய் துப்பாக்கிச்சூட்டுக்குக்கூட நிதிஷ் குமார் அரசுதான் காரணம் என மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் கிரிராஜ் சிங் குற்றம்சாட்டியிருந்தார். இந்த நிலையில், மத்திய அமைச்சரின் இத்தகைய குற்றச்சாட்டுக்கு, பீகார் மாநில துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் இன்று பதில்விமர்சனம் முன்வைத்திருக்கிறார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தேஜஸ்வி யாதவ், “பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் குற்றம் நடந்தால், அதை அவர்களின் முதல்வர் செய்கிறாரா? பாலியல் வன்கொடுமை நடந்தால், அதைச் செய்வதும் அவர்களின் முதல்வர் தானா?
எந்த அடிப்படையில் நம்முடைய சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து பா.ஜ.க கேள்வி எழுப்புகிறது. உத்தரப்பிரதேசத்தில் கூடத்தான் தினமும் பெருங்குற்றங்கள் நடக்கின்றன, எனில் அங்கு நடப்பது `ராம ராஜ்ஜியம்’ தானா? அதுமட்டுமல்லாமல் அவர்கள் சொல்வது போல் ஒருபோதும் அவர்கள் செய்யமாட்டார்கள், அவர்கள் செய்யும் செயல்களெல்லாம் மக்களைப் பிரித்து சமூகத்தை விஷமாக்குகிறது” என அடுக்கடுக்காகக் கேள்வியெழுப்பி விமர்சித்தார்.