ராஞ்சி: குழப்பமான சூழலில் நியாமற்ற முயற்சிகளை பாஜக மேற்கொண்டு வருகிறது என்றும் தேர்தல் ஆணையம் அளித்துள்ள பரிந்துரை என்ன என்பதை தனது தரப்புக்கு விரைவில் தெரிவிக்க வேண்டும் என்றும் ஆளுநரிடம் கடிதம் வழங்கியிருப்பதாக ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார்.
ஜார்க்கண்ட் மாநில முதல்வராக இருப்பவர் ஹேமந்த் சோரன்.
கடந்த ஆண்டு இவர் அரசு ஒப்பந்தமான சுரங்க ஒதுக்கீடு ஒன்றை தன் பெயரிலேயே ஒதுக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
ஹேம்ந்த் சோரன்
தன் பதவியை தவறாக பயன்படுத்தி இந்த ஒப்பந்தம் செய்துள்ளதாக பாஜக அவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இதேபோல் கடந்த பிப்ரவரி மாதம் பாஜக மூத்த தலைவர் ஒருவர் ஹேமந்த் சோரனுக்கு எதிராக தேர்தல் ஆணையத்திலும் புகார் தெரிவித்தார். அதில் ஹேம்ந்த் சோரன் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தை மீறி செயல்பட்டுள்ளார் என்றும், எனவே அவரை எம்.எல் ஏ பதவியில் இருந்து நீக்கம் செய்து உத்தரவிடும் படியும் கூறியிருந்தார்.
காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வருகிறது
இது தொடர்பாக இருதரப்பிடமும் தேர்தல் ஆணையம் விசாரித்து வந்த நிலையில், இறுதியாக இது குறித்த கோப்பினை அம்மாநில ஆளுநருக்கு அனுப்பியுள்ளது. எனினும் ஆளுநர் இது தொடர்பாக தனது முடிவை வெளியிடவில்லை. ஜார்க்கண்டில் முதல்வர் ஹேமந்த் சோரன் எம்.எல்.ஏ பதவி பறிக்கப்படும் பட்சத்தில் அவரால் முதல்வர் பதவியில் நீடிக்க முடியாது. இதனால், மாநில அரசியலில் ஏற்படும் அசாதாரண சூழலை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள பாஜக முயற்சிப்பதாக ஹேமந்த் சோரன் கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வருகிறது.
பெரும்பான்மையை நிரூபித்த ஹேமந்த்
எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபட முயற்சிப்பதாக அண்மையில் ஜார்க்கண்டில் பரபரப்பு எழுந்தது. இதையடுத்து எம்.எல்.ஏக்களை சத்தீஷ்கருக்கு ஆளும் கூட்டணி கட்சி அழைத்து சென்றது. பின்னர் கடந்த 5 ஆம் தேதி ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்திய ஹேமந்த் சோரன் தனது அரசுக்கு பெரும்பான்மை பலம் இருப்பதை காட்டினார். 80 சட்டப்பேரவை தொகுதிகளை கொண்ட ஜார்க்கண்ட்டில் பெரும்பான்மைக்கு 41 இடங்கள் தேவைப்படும் நிலையில், ஹேமந்த் சோரன் 48 எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் பெரும்பான்மையை நிரூபித்தார்.
ஆளுநரை சந்தித்த ஹேமந்த்
இவ்வறாக ஜார்க்கண்ட் அரசியலில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பரபரப்பு நிலவிக்கொண்டு இருக்கும் நிலையில், இன்று அம்மாநில ஆளுநரை ஹேமந்த் சோரன் சந்தித்தார். ராஞ்சியில் உள்ள ராஜ்பவனில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்புக்குப் பிறகு, ஹேமந்த் சோரன் தனது ட்விட்டரில் வெளியிட்டு இருக்கும் பதிவில் கூறியிருப்பதாவது:- ”ஆளுநரை இன்று சந்தித்துப் பேசினேன்.
தேர்தல் ஆணையம் அளித்த பரிந்துரை என்ன
அப்போது, மாநிலத்தில் மூன்று வாரங்களுக்கும் மேலாக நிலவும் குழப்பமான சூழலை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி கடிதம் அளித்து இருக்கிறேன். இந்த குழப்பமான சூழலில் நியாமற்ற முயற்சிகளை பாஜக மேற்கொண்டு வருகிறது” என்று தெரிவித்தார். தேர்தல் ஆணையம் அளித்துள்ள பரிந்துரை என்ன என்பதை தனது தரப்புக்கு தெரிவிக்கும் வகையில் நகல் ஒன்றை அளிக்குமாறும் ஹேமந்த் சோரன் ஆளுநரிடம் அளித்த கடிதத்தில் தெரிவித்து இருப்பதாக சொல்லப்படுகிறது.