டெல்லி: மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்கா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏழு ஹெலிபேடுகள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த குனோ தேசியப் பூங்காவுக்கு பிரதமர் மோடி வரும் 17ம் தேதி வரவுள்ளதாக மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஏற்கனவே அறிவித்திருந்தார். இதன் ஒரு பகுதியாக ஆப்பிரிக்க நாடான நமீபியாவில் இருந்து சிறுத்தைகள் பெறுவதற்கு ஒப்பந்தம் போடப்பட்டது. பிரதமர் மோடியின் 72வது ஆண்டு பிறந்தநாள் வரும் 17ம் தேதி வருகிறது. அன்றைய தினம் தென்னாப்பிரிக்காவை சேர்ந்த சிறுத்தைகள், குனோ தேசியப் பூங்காவுக்கு கொண்டு வரப்படுகின்றன.
5 பெண் மற்றும் 3 ஆண் சிறுத்தைகள் அடங்கிய இந்த குழு, விமானம் மூலம் நமீபியாவில் இருந்து வருகிற 17-ம் தேதி காலை ராஜஸ்தானின் ஜெய்ப்பூருக்கு சரக்கு விமானத்தில் கொண்டு வரப்படும். பின்னர் அங்கு இருந்து ஹெலிகாப்டரில் மத்திய பிரதேசத்தின் குணோ தேசிய பூங்காவுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. பிரதமர் மோடியின் பிறந்த நாளுக்கு 12 தென்னாப்பிரிக்க சிறுத்தைகள் இந்தியா வரவுள்ளதாக கூறப்படும் நிலையில், அதற்கான ஏற்பாடுகள் மத்திய பிரதேச பூங்காவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விமான பயணத்தின் போது சிறுத்தைகள் கழிக்கும் நேரங்களில் வெறும் வயிற்றில் இருக்க வேண்டும் என வனத்துறை மூத்த அதிகாரி சவுகான் தெரிவித்துள்ளார்.
இந்த முழு பயணத்தின் போதும் நமீபியாவில் இருந்து வரும் சிறுத்தைகளுக்கு இடையில் உணவு வழங்கப்படாது. நமீபியாவில் இருந்து புறப்பட்ட பிறகு, இந்த சிறுத்தைகளுக்கு உணவு குனோ-பால்பூர் தேசிய பூங்காவில் தான் வழங்கப்படும். நீண்ட பயணம் விலங்குகளுக்கு குமட்டல் போன்ற உணர்வுகளை உருவாக்கி மற்ற சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என்பதால் இதுபோன்ற முன்னெச்சரிக்கை தேவை எனவும் தெரிவித்துள்ளார்.