புதுச்சேரி: புதுச்சேரியில் நிலத்தடி நீரை உறிஞ்சும் புதிய மதுபான ஆலைகளுக்கு அனுமதி தர அம்மாநில பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி அரசு ஆட்சி அமைந்துள்ளது. பாஜக தலைமை அலுவலகத்தில் புதுச்சேரி மாநில பாஜக தலைவர் சாமிநாதன் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “நாராயணசாமி முதல்வராக இருந்தபோது ஆளுநர் கிரண்பேடி தன் அரசுக்கு முட்டுக்கட்டை போடுவதாக கூறி வந்தார். தற்போதைய முதல்வர் ரங்கசாமி, துணைநிலை ஆளுநர் தமிழிசை தன்னுடன் இணக்கமாக செயல்படுவதாக கூறி வருகிறார். ஆனால் நாராயணசாமி ஆளுநர், புதுச்சேரி அரசில் தலையிடுவதாக தொடர்ந்து பொய்யான புகாரை கூறி வருகிறார். அதேபோல ரவுடிகள் ராஜ்ஜியம் நடப்பதாகவும் நாராயணசாமி கூறுகிறார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் மட்டும் புதுச்சேரியில் 20 லட்சம் சுற்றுலா பயணிகள் புதுவைக்கு வந்துள்ளனர். சுற்றுலா பயணிகள் விரும்பும் மாநிலமாக புதுச்சேரி திகழ்கிறது. எந்த ஒரு பயணியும் தவறான சம்பவம் நடந்ததாக புகார் கூறியதில்லை. நாராயணசாமி சொல்வது பொய் என பட்டவர்த்தனமாக தெரிகிறது. நாராயணசாமி ஆட்சியில்தான் அவரின் தொகுதியான நெல்லித்தோப்பில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழில் தலைவிரித்தாடியது. போதைப்பொருள் நடமாட்டமும் காங்கிரஸ் ஆட்சியில்தான் அதிகரித்தது. ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பேதைப்பொருளை தடுத்து வருகிறது.
நேற்றைய தினம் கூட 15 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். ரவுடிகளை அரசு அடக்கி வருகிறது. காவல் துறையில் ஆளும் கட்சியின் தலையீடு இல்லை. இதற்கு பாஜகவினர் மீதே வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதுதான் உதாரணம். பொதுமக்களின் பாதுகாப்புதான் முக்கியம் என்பது தேசிய ஜனநாயக கூட்டணியின் கொள்கை.
மதுபான ஆலைக்கு அனுமதி வழங்க ரூ.15 கோடி ஊழல் நடந்துள்ளதாக பாஜக எம்எல்ஏ கூறியிருப்பது அவரது சொந்த கருத்து. இது தொடர்பாக என்ன ஆதாரம் உள்ளது என கட்சி சார்பில் கேட்போம். ஊழல் நடந்திருந்தால் எதிர்ப்போம்.
நிலத்தடி நீரை உறிஞ்சும் எந்த தொழிற்சாலை அமைவதையும் பாஜக எதிர்க்கும். ஏனெனில், பிரதமர் நிலத்தடி நீரை பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமை என கூறியுள்ளார். புதிய மதுபான ஆலை அனுமதி ஆரம்ப கட்டத்தில்தான் உள்ளது. இந்த ஆலைகளுக்கு நிலத்தடி நீரை உறிஞ்சினால் இதை பாஜக வரவேற்காது. எதிர்க்கத்தான் செய்வோம்.
ஊழலை ஒருபோதும் பாஜக ஆதரிக்காது. ஆங்காங்கே நடக்கும் ஓரிரு குற்ற சம்பவங்களும் தனிப்பட்ட விரோதத்தால் நடப்பவை.
புதுச்சேரி மாநில பாஜக சார்பில் பிரதமர் மோடி பிறந்தநாளையொட்டி வரும் 17ம் தேதி முதல் அக்டோபர் 2ம் தேதி வரை பல்வேறு விழாக்களை நடத்த உள்ளோம். பாஜகவின் ஒவ்வொரு நிர்வாகியும் காசநோயாளிகளை தத்தெடுத்து அவர்களின் மருத்துவ சேவையை ஓராண்டு வழங்க உள்ளோம்.
மாற்றுத்திறனாளிகளுக்கு வாகனம், செயற்கை உபகரணங்கள் வழங்க உள்ளோம். 30 தொகுதிகளிலும் அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை பங்களிப்புடன் பொதுமக்களுக்கு இலவச மருத்துவ முகாம், தடுப்பூசி முகாம் ஆகியவற்றையும் நடத்த உள்ளோம். சுதேசி பொருட்களை ஊக்குவிக்க வேண்டும் என்ற அடிப்படையில் கண்காட்சியும், அக்டோபர் 2ம் தேதி காதி பொருட்களை பாஜக நிர்வாகிகள் வாங்க உள்ளோம்” என்று சாமிநாதன் கூறினார்.