புதுடில்லி :ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பரிசளிக்க, பா.ஜ., – எம்.எல்.ஏ.,க்கள் ஐந்து ஆட்டோக்களுடன் முதல்வர் இல்லத்துக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுடில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சமீபத்தில் குஜராத் மாநிலம் ஆமதாபாதில் இரண்டு நாள் முகாமிட்டு, அங்கு ஆட்டோ டிரைவர் வீட்டில் இரவு உணவு சாப்பிட்டார்.
அவர் தங்கியிருந்த நட்சத்திர ஹோட்டலில் இருந்து, அந்த டிரைவர் ஆட்டோவில் கெஜ்ரிவாலை அழைத்துச் சென்றார். ஆனால், பாதுகாப்பு காரணங்களுக்காக ஆட்டோவில் செல்ல அனுமதிக்க முடியாது என போலீசார் கூறினர்.
இதையடுத்து, போலீஸ் அதிகாரிகளுக்கும், கெஜ்ரிவாலுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, எனக்கு பாதுகாப்பே தேவையில்லை என கெஜ்ரிவால் ஆவேசத் துடன் கூறினார்.
இதையடுத்து, ஆட்டோ டிரைவர் அருகில் ஒரு போலீஸ் அதிகாரி அமர்ந்து கொண்டார். அந்த ஆட்டோவுக்கு முன்னும், பின்னும் போலீஸ் வாகனங்கள் வந்தன. இந்த சம்பவத்துக்கு, டில்லி பா.ஜ., – எம்.எல்.ஏ.,க்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.இது குறித்து, புதுடில்லி சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரும், பா.ஜ., – எம்.எல்.ஏ.,வுமான ராம்வீர் சிங் பிதுரி, ‘அரவிந்த் கெஜ்ரிவால் குஜராத் தேர்தலை மனதில் வைத்து, அங்கு நாடகம் நடத்தியுள்ளார்.
‘எனவே, அவர் டில்லியிலும் ஆட்டோவிலேயே பயணிக்கலாம். அவர் பயணிக்க ஒன்று, பாதுகாப்பு அதிகாரிகள் செல்ல நான்கு என, ஐந்து ஆட்டோக்கள் அவருக்கு பா.ஜ., சார்பில் வழங்கப்படும்’ என கூறியிருந்தார்.
இந்நிலையில், புதுடில்லியில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டுக்கு , ஐந்து ஆட்டோக்களுடன் பா.ஜ., – எம்.எல்.ஏ.,க்கள் வந்தனர்; இவற்றை முதல்வருக்கு பரிசாக வழங்க வேண்டும் என கூறினர்.இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு அதிகாரிகள், எம்.எல்.ஏ.,க்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்