பூங்கோரை பாசியால் பச்சை நிறமாக மாறிய மன்னார் வளைகுடா கடல்: சிறிய ரக மீன்கள் உயிரிழக்கும் அபாயம்

ராமேசுவரம்: ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா பாம்பன் முதல் மண்டபம் வரையிலான கடல் பரப்பில் பூங்கோரை பாசியால் கடல் நீரின் நிறம் பச்சையாக மாறி காட்சி அளிக்கிறது. இதனால் சிறிய ரக மீன்கள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மன்னார் வளைகுடா கடல்பகுதியில் கடந்த ஒரு வார காலமாக பாம்பன் முதல் மண்டபம் வரையிலான கடல் பரப்பில் நீரோட்டத்தால் பச்சை நிற பூங்கோரைப் பாசிகள் அடித்து வரப்பட்டு கரை ஒதுங்கின. இந்தப் பாசிகளால் பாம்பன் முதல் மண்டபம் வரையிலுமான கடற்கரையில் துர்நாற்றம் வீசி வருகிறது.

மேலும் பாம்பன் பாலம் வழியாக இந்த பாசி தெற்கே மன்னார் வளைகுடா கடலில் இருந்து வடக்கே பாக் ஜலசந்தி கடல் பரப்புக்கு அடித்துச் செல்லப்படுகிறது.

2019-ம் ஆண்டிலிருந்து கடந்த3 ஆண்டுகளாக செப்டம்பர், அக்டோபரில் மன்னார் வளைகுடா பகுதியில் ‘நாட்டிலுக்கா சின்டிலெம்ஸ்’ எனும் ‘பூங்கோரை’ பாசிகள் பெருமளவில் படர்ந்து, மீன்களின் செதில்களில் அடைபட்டு சுவாசிக்க முடியாமல் திணறி பல ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்து மன்னார் வளைகுடா கடற்பகுதியில் கரை ஒதுங்கின.

ஆராய்ச்சியாளர்கள் விளக்கம்

இந்த பூங்கோரைப் பாசிகளை மரைக்காயர் பட்டினத்தில் உள்ள மத்தியக் கடல் மீன்வள ஆராய்ச்சி நிலைய ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறியதாவது:

செப்டம்பர், அக்டோபரில் அதிகளவில் உற்பத்தியாகும் ‘நாட்டிலுக்கா சின்டிலெம்ஸ்’ பூங்கோரை கடற்பாசியால் கடல் நீர்பச்சை நிறத்தில் காட்சி அளிக்கிறது. மன்னார் வளைகுடா கடற்பகுதியில் இந்த பாசிகள் தற்போது நீரோட்டத்தால் பரவி வருகிறது. கடல் இயல்பு நிலைக்கு விரைவில் வந்துவிடும். இதனால் மீனவர்கள் அச்சப்படத் தேவையில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.