பேரறிஞர் அண்ணாவின் பயணத்தை நாங்கள் தொடர்கிறோம் – மக்கள் நீதி மய்யம்

திராவிட முன்னேற்ற கழகத்தை உருவாக்கியவர் பேரறிஞர் அண்ணா. இரண்டு வருடங்கள் மட்டுமே தமிழ்நாட்டை அவர் ஆட்சி செய்திருந்தாலும் பல தரமான செயல்களை செய்தார். இதனால் அவர் மக்கள் மனதில் நிரந்தரமாகிவிட்டார். இன்று பேரறிஞர் அண்ணாவுக்கு 114ஆவது பிறந்தநாள் ஆகும். இதனையொட்டி தமிழ்நாடு முழுவதும் அவரது பிறந்தநாள் விமரிசையாக கொண்டாடப்பட்டு அவரை பலர் நினைவுகூர்ந்துவருகின்றனர்.

இந்நிலையில் அண்ணாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்யம், “’பல்வேறு மக்கள் வாழும் பரந்த நிலப்பரப்பான இந்தியாவில் ஒரே ஆட்சி நிலவுவதென்பது முடியாது; அதேபோல, ஒரே மொழி அரசாங்க மொழியாக இருக்க  இயலாது’ என்ற பேரறிஞர் அண்ணாவின் வார்த்தைகள், இன்றைக்கும் எத்தனைப் பொருத்தமாய்த் திகழ்கின்றன. 

 

கடவுள் உண்டு என்பவர்க்கும் இல்லை என்பவர்க்கும் இடையில் ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன் ‘  என்று மய்யமாய் ஒரு சித்தாந்தத்தை அன்றே கண்ட அறிஞர் பெருந்தகை; திராவிடக் கனவுக்கு உயிர்கொடுத்து, மெட்ராஸ் ராஜதானிக்கு `தமிழ்நாடு’ எனப் பெயர் சூட்டிய சமூக நீதிப் போராளி அண்ணா. 

மொழியைத் திணிப்போருக்கு, மாநில சுயாட்சியைக் குலைப்போருக்கு  பேரறிஞரை நினைவூட்டுகிறோம். இன்னமும் அவருக்குத் தம்பிகள் உண்டு. எவ்வகைத் திணிப்பையும் எதிர்க்கும் தைரியமும் எங்களுக்கு உண்டு. ஆதிக்கத்திற்கு எதிராகப் படைதிரட்டி  எதிர்ப்பாற்றலை உருவாக்கிய பேரறிஞர்  அண்ணாவுக்கு  வந்தனங்கள்! 

நீங்கள் முன்னெடுத்து முழங்கிய மாநில சுயாட்சித் தத்துவத்தின்  உள்ளே பொதிந்திருக்கும்  “உள்ளாட்சியில் சுயாட்சிக்கான” பயணத்தை நாங்கள் தொடர்கிறோம்” என பிறந்தநாள் வாழ்த்தில் தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.