சென்னை : நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி உள்ளிட்டவர்களின் சிறப்பான நடிப்பில் உருவாகியுள்ளது பொன்னியின் செல்வன்.
இந்தப் படத்தை இயக்கியுள்ளார் மணிரத்னம். சர்வதேச அளவில் வரும் செப்டம்பர் 30ம் தேதி படம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.
இந்தப் படத்தின் ரிலீசுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், படத்திற்கான பிரமோஷனை படக்குழு சிறப்பான வகையில் திட்டமிட்டுள்ளது.
கல்கியின் பொன்னியின் செல்வன்
பிரபல நாவலாசிரியர் கல்கியின் கைவண்ணத்தில் வெளியான பொன்னியின் செல்வன் நாவல், சோழர்களின் வாழ்க்கையை சிறப்பான வகையில் பதிவு செய்த காவியம். கல்கியின் எழுத்துநடைக்கு அந்தக் காலத்தில் மயங்காதவர்களே இல்லை என்று கூறலாம். சோழர் சாம்ராஜ்யத்தில் நாம் வாழ்ந்த உணர்வை அவரது எழுத்து நடை கொடுத்தது.
சிறப்பை பகிர்ந்த ரஜினிகாந்த்
அந்தக் காலத்தில் இந்த படைப்பு வாரயிதழ் ஒன்றில் வெளியான நிலையில், ரசிகர்கள் படத்தின் வெளியீட்டிற்காக காத்திருப்பது போல காத்திருந்து தங்களது பிரதிகளை வாங்கிச் செல்வார்கள் என்று சமீபத்தில் இந்தப் படத்தின் இசை வெளியீட்டின்போது சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார்.
திரைப்படமாக்கும் முயற்சி
அந்த வகையில் ரசிகர்களை கட்டிப் போட்ட இந்த நாவலை திரைவடிவமாக்க முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் முதல் கமல்ஹாசன் வரை அனைவரும் முயற்சித்தனர். அவர்களின் முயற்சி பலிக்காத நிலையில் தன்னுடைய மூன்றாவது முயற்சியில் இந்தப் படைப்பை திரைக்காவியமாக்கியுள்ளார் இயக்குநர் மணிரத்னம்.
சிறப்பான கேரக்டர் தேர்வு
அந்த வகையில், இந்தப் படத்தின் கேரக்டர் தேர்வும் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. வந்தியத்தேவனாக கார்த்தி, அருண்மொழியாக ஜெயம் ரவி, ஆதித்த கரிகாலனாக விக்ரம், நந்தினியாக ஐஸ்வர்யா ராய் மற்றும் குந்தவையாக த்ரிஷா என அந்தந்த கேரக்டர்களுக்கு நடிகர்கள் தேர்வு மூலம் வலிமை சேர்த்துள்ளார் மணிரத்னம்.
பிரமோஷன்கள் துவக்கம்
இதனிடையே இந்தப் படத்தின் டீசர், ட்ரெயிலர், பாடல்கள் என வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீடும் மிகவும் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டு படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. படம் வெளியாக இன்னும் இரு வாரங்களே உள்ள நிலையில் தற்போது படக்குழு தங்களின் பிரமோஷன் பணிகளை துவக்கவுள்ளன.
பிரமோஷனல் டூர்
இதையொட்டி நடிகர் விக்ரம், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் முன்னதாக அறிவித்த நிலையில், அதற்கு கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா உள்ளிட்டவர்களும பதில் கொடுத்தது மிகவும் சுவாரஸ்யமாக அமைந்தது. இந்நிலையில் படக்குழுவினர் விரைவில் தங்களது பிரமோஷன் டூரை துவங்கவுள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை டூ துபாய்
சென்னையில் துவங்கும் இந்த பிரமோஷன் டூர், விக்ரம் தனது ட்விட்டரில் குறிப்பிட்ட படி அடுத்ததாக தஞ்சாவூருக்கு செல்கிறது. தொடர்ந்து கொச்சி, பெங்களூரு, ஐதராபாத், டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் துபாய் வரை நீளவுள்ளது. இந்த டூரில் யரெல்லாம் கலந்துக் கொள்வார்கள் மற்றும் எப்பொழுது துவங்கவுள்ளது என்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகவுள்ளது.