மதுரையில் உள்ள வண்டியூர் கண்மாய் பீச் போன்ற சுற்றுலா தலமாக மாற உள்ளதாக வெளியாகியுள்ள அதன் மாதிரி படங்கள் மதுரை மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
சென்னைக்கு அடுத்தபடியாக பெருநகரமாக உள்ள மதுரையில் மக்கள் பொழுதுபோக்கும் வகையிலான இயற்கை சார்ந்த சுற்றுலா தலம் இல்லை என்ற குறை நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது. இந்த குறையை போக்கும் வகையில் மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள வண்டியூர் கண்மாயை பொழுதுபோக்கு சுற்றுலா தளமாக மாற்ற மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இயற்கை எழில் பொங்கும் நீர் நிலை சுற்றுலா தளமாக அமைய உள்ள இந்த சுற்றுலா தலம் எவ்வாறு அமைய உள்ளது என்பது குறித்த மாதிரி புகைப்படங்கள் தற்பொழுது வெளியாகி மதுரை மக்களுக்கு மகிழ்ச்சியையும் குதூகலத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மதுரை பாண்டி கோயில் அருகே 450 ஏக்கரில் அமைந்துள்ள வண்டியூர் கண்மாயில் ஆண்டு முழுவதும் தண்ணீர் நிரம்பி காணப்படுவதால் ரம்மியமாக காட்சியளிக்கும். இந்நிலையில் அதனை நீர்நிலை சுற்றுலா தளமாக மாற்ற மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. 99 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைய உள்ள இந்த ‘டூரிஸ்ட் ஸ்பாட்’ திட்டத்தை மாநில அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி உள்ள நிலையில் விரைவில் அதற்கான ஒப்புதல் கிடைக்கப்பெற்று பணிகள் துவங்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதற்காக கண்மாயைச் சுற்றிலும் 7 கி.மீ. தூர நடைபாதை உருவாக்கப்படுகிறது, கண்மாயின் மையத்தில் அழகான சிறிய தீவு உருவாக்கப்படுகிறது. அந்த தீவுக்கு பொதுமக்கள் மரப்பாலம் வழியாக கண்மாயின் அழகை ரசித்தபடியே நடந்து செல்லவும். மரப்பாலத்தில் ஆங்காங்கே அமர்ந்து இளைப்பாற இருக்கைகள் அமைக்கப்படுகின்றன. மேலும் படகு சவாரி வசதியும் ஏற்படுத்தப்பட உள்ளது.
கண்மாயை ரசிக்க வரும் குழந்தைகள், பெரியவர்களுக்கு உணவருந்த சிற்றுண்டி கடைகள், கண்மாயின் மையத்தில் தமிழன்னை சிலையும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் கண்மாய்க் கரை பகுதியில் இரவை அழகாக்க இசை நீரூற்றும் அமைகிறது. இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் எதிர்கால தலைமுறையினருக்கு சிறந்த பொழுதுபோக்கு அம்சமாக அமையும் என்கிறார்கள் மதுரை மக்கள்.
மதுரை மக்களுக்கு திரையரங்குகளை விட்டால் வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லாத நிலையில், இந்த சுற்றுலா தளம் அமைய உள்ளது மிக்கப்பெரிய வரப்பிரசாதமாக இருக்கும். நீர் நிலைகள் சார்ந்த சுற்றுலா தளமாக அமைவது கூடுதல் மகிழ்ச்சியாக உள்ளது. சிறார்களுக்கு மகிழ்ச்சியை தரும் வகையில் அமையும் என நம்புவதாக கூறும் மக்கள் அறிவிப்போடு விட்டுவிடாமல் விரைந்து அமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்களுக்கு இன்பம் தரும் இந்த திட்டம் எந்த வகையிலும் நீர் நிலையை பாதிக்கும் வகையில் இருந்து விடக் கூடாது என்பதும் இயற்கை ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.
மதுரை செய்தியாளர் – கணேஷ்குமார்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM