நாமக்கல்: “தமிழகத்தில் மின் கட்டணத்தை தொடர்ந்து பேருந்து கட்டணத்தையும் உயர்த்தப் போகிறார்கள்” என்று முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி கூறினார்.
குமாரபாளையத்தில் அதிமுக சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி எம்எல்ஏ அண்ணா உருசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது அவர் பேசியது: “ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் பணி செய்து வருவது அதிமுக. திமுகவுக்கு வாக்களித்த மக்கள் எல்லோரும் ஏன் வாக்களித்தோம் என்று எண்ணிக் கொண்டு உள்ளனர்.
சொத்து வரி உயர்வுடன், தற்போது மின் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. இதை கண்டித்துதான் முன்னாள் முதல்வர் பழனிசாமி உத்திரவின்படி ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. அதிமுக ஆட்சியில் அண்ணனின் ஆட்சியில் மின் வெட்டு இல்லை. மின் கட்டண உயர்வும் இல்லாமல் ஆட்சி செய்தனர். மக்கள் நிம்மதியாக இருந்தனர். இலவச பேருந்து என்று சொல்லிவிட்டு பாதி பேருந்தை நிறுத்தி விட்டார்கள். இதுதான் திமுக அரசின் சாதனை. இனி பேருந்து கட்டணமும் உயர்த்தப் போகிறார்கள்.
மதுரை அமைச்சர் தனது இல்லத் திருமணத்தை 100 கோடி ரூபாய் செலவில் செய்துள்ளார். ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுதான் ஆகின்றது. இந்த திருமணத்திற்கு முதல்வர் சென்று பாராட்டி வந்துள்ளார். இதனால் கொள்ளையடிப்பதற்கு முதல்வரே பச்சைக்கொடி காட்டி விட்டு வருகிறார். வரும் மக்களவைத் தேர்தலில் திமுகவிற்கு முடிவு கட்டும் வகையில் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து 40 பேரையும் வெற்றி பெற செய்ய வேண்டும்”என்றார்.
முன்னதாக, ஆனங்கூர் பிரிவு சாலையில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு ஊர்வலம் நடைபெற்றது. இதில் அதிமுக நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.