நாகர்கோவில்: நாகர்கோவில் மாநகர பகுதிகள் மீண்டும் போக்குவரத்து ெநரிசலில் திணறி வருகின்றன. இதனால் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகள் போக்குவரத்து நெரிசலால் தொடர்ந்து திணறி வருகிறது. பாதாள சாக்கடை பணிகளுக்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது போக்குவரத்து நெரிசலை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. செட்டிகுளம் சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படுகிறது. இதனால் பள்ளி செல்லும் மாணவ, மாணவியர் முதல் அலுவலக பணிக்கு செல்லும் பணியாளர்கள் வரை கடுமையாக சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். போக்குவரத்தை சீர் செய்ய முடியாமல் போக்குவரத்து போலீசாரும் திணறி வருகின்றனர். இதனை போன்று செட்டிக்குளம் சந்திப்பில் இருந்து வேப்பமூடு செல்லும் சாலையில், மாநகராட்சியின் அறிவுறுத்தலின் பேரில் போக்குவரத்து காவல்துறை சார்பில் அண்மையில் காங்கிரிட் பிளாக்குகளை கொண்டு சாலையில் சென்டர் மீடியன் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சாலை குறுகிய சாலை என்பதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வாடிக்கையாகி விட்டது. அவ்வப்போது விபத்துக்களும் நிகழ்ந்து வருகிறது. குறுகிய சாலையில் சென்டர் மீடியன் இடையே சிக்கி வாகன ஓட்டிகள் திணறி வருகின்றனர். சாலையை அகலப்படுத்தாமல் உள்ளதால் வாகனங்கள் செல்வதில் பெரும் சிரமம் இருந்து வருகிறது.
நாகர்கோவில் அசம்பு ரோட்டில் தினமும் காலை, மாலை, மதியம் என்று அனைத்து வேளைகளிலும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். அரசு பஸ்கள் செல்லும்போது ஒரு வாகனத்திற்கு மற்றொரு வாகனம் வழிவிட முடியாமல் நெரிசலில் சிக்கி திணறுகின்றன. எனவே மாநகராட்சி நிர்வாகம் இது தொடர்பாக தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.