சென்னை: முதல்வர ஸ்டாலின் வீட்டை முற்றுகையிட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி ஏபிவிபி அமைப்பினர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தஞ்சை மாவட்ட பள்ளி மாணவி மரணத்திற்கு நீதி கேட்டும், மேலும் இதுபோன்ற மரணங்கள் நிகழக் கூடாது என்பதை வலியுறுத்தியும், மாணவி தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் உடனடியாக ஜாமீனில் வெளிவந்ததை கண்டித்தும் ஏபிவிபி அமைப்பை சேர்ந்த இளைஞர்கள், கடந்த பிப்ரவரி 14-ம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இல்லத்தின் அருகே முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களை தடுக்க முயன்ற காவல்துறையினரை தாக்கி, உடைகளை கிழித்து, காவல்துறை வாகனங்களை சேதப்படுத்தியதாக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அடையாறு காவல் நிலைய ஆய்வாளர் ராஜேஸ்வரி புகார் அளித்தார்.
இந்தப் புகாரில் ஏபிவிபி அமைப்பைச் சேந்த் 35-க்கும் மேற்பட்டோர் மீது சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் சட்டவிரோதமாக ஒன்று கூடுதல், கலகம் செய்ய தூண்டிவிடுதல், இரு பிரிவினரிடையே விரோதத்தை தூண்டுதல் ஆகிய பிரிவுகள் மற்றும் பொது சொத்துக்களை சேதப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி கவுசிக், உகேந்திரன், சுசீலா, அமர் வஞ்சிதா உள்ளிட்ட 31 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அவர்களது மனுவில் “மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டே போராட்டத்தில் ஈடுபட்டோம். முதல்வரின் கவனத்தை ஈர்ப்பது மட்டுமே எங்களது நோக்கமாக இருந்தது. இந்தப் போராட்டத்தின்போது ஆயுதங்கள் ஏதும் வைத்திருக்கவில்லை” எனக் குறிப்பிட்டிருந்தனர்.
இந்த மனு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இதுபோன்ற போராட்டங்களை ஊக்குவிக்க முடியாது எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.