மும்பை: பண மோசடி வழக்கு தொடர்பாக மும்பையைச் சேர்ந்த இரு நிறுவனங்களில் நேற்று சோதனையில் ஈடுபட்ட அமலாக்கத் துறை 431 கிலோ தங்கம் மற்றும் வெள்ளியை கைப்பற்றியுள்ளது. இவற்றின் மதிப்பு ரூ.47.76 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பையைத் தலைமையிடமாகக் கொண்ட பரேக் அலுமினக்ஸ் நிறுவனம், பல்வேறு வங்கிகளிடமிருந்து ரூ.2,300 கோடி கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டது.
இந்நிறுவனம் மீது 2018-ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை இம்மோசடி தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றன.
இந்த வழக்குத் தொடர்பாக மும்பை ரக்ஷா புல்லியன் மற்றும் கிளாசிக் மார்பிள் ஆகிய இரு நிறுவனங்களுக்குச் சொந்தமான இடங்களில் நேற்று அமலாக்கத் துறை சோதனையில் ஈடுபட்டது.
அப்போது ரக்ஷா நிறுவனத்தில் சில சாவிகள் கிடைத்தன. அந்த சாவிகள் குறித்து விசாரித்தபோது அது தனியார் ரகசிய லாக்கர்களுக்கான சாவிகள் என்பது தெரியவந்தது.
இதையடுத்து அந்த ரகசிய லாக்கர்கள் இருக்கும் இடத்துக்குச் சென்ற அமலாக்கத் துறை அந்தச் சாவிகள் தொடர்புடைய மூன்று லாக்கர்களை திறந்தது.
அதில் ஒரு லாக்கரில் 91.5 கிலோ தங்கக் கட்டிகளும் மற்ற இரு லாக்கர்களில் 152 கிலோ வெள்ளியும் கண்டெடுக்கப்பட்டன. இதுதவிர ரக்ஷா புல்லியன் நிறுவனத்தில் 188 கிலோ வெள்ளி கண்டெடுக்கப்பட்டது. இவற்றை அமலாக்கத் துறை பறிமுதல் செய்துள்ளது.