மாஸ்கோ: ரஷ்ய அதிபர் புதினை கொலை செய்ய முயற்சி நடந்ததாகவும் அந்த தாக்குதலில் இருந்து புதின் உயிர் தப்பியதாகவும் யூரோ விக்கி நியூஸ் வெளியிட்டுள்ள செய்தியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உலகின் சக்தி வாய்ந்த தலைவர்களில் ஒருவராக அறியப்படுவர் ரஷ்ய அதிபர் புதின்.
முன்னாள் உளவுத்துறை அதிகாரியான புதின் கடந்த 1999-ஆம் ஆண்டு முதல் ரஷ்யாவில் அதிகாரம் மிக்க பதவியில் கோலோச்சி வருகிறார்.
புதின் பற்றிய வதந்திகள்
புதினை பற்றியும் அவரது உடல் நலம் குறித்தும் யூகச் செய்திகளுக்கு எப்போதும் பஞ்சமே இருக்காது. அதுவும் உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் ரஷ்யா படையெடுத்த பிறகு புதினை பற்றிய பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன. புதின் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் தன்னைப்போல போலி நபரை புதின் பரவ விட்டு இருப்பதாகவும் ஹாலிவுட் படங்களுக்கு நிகராக அவரைப் பற்றிய செய்திகள் மேற்கத்திய ஊடகங்களால் பரப்பப்பட்டு வந்தன.
காரின் முன்பு மர்ம பொருள்
இந்த நிலையில், புதினை கொலை செய்யும் திட்டத்துடன் அவர் மீது தாக்குதல் நடைபெற்று இருப்பதாக தற்போது வெளியாகி இருக்கும் தகவல் உலக அரங்கில் பரபரப்பை கிளப்பியிருக்கிறது. இது தொடர்பாக யூரோ வீக்லி நியூஸ் வெளியிட்டுள்ள செய்தியில் அவர் சென்ற காரின் முன்பு மர்ம பொருள் வெடித்ததாகவும் இதில் அவரது காரில் புகை வந்தது என்றும் கூறப்பட்டு உள்ளது.
புதினுக்கு பாதிப்பு இல்லை
அந்த செய்தியில் கூறி இருப்பதாவது:- ”பாதுகாப்பு வாகனங்கள் புடை சூழ புதின் தனது லிமோசின் காரில் சென்று கொண்டிருந்த போது காரின் இடது பக்க முன்சக்கர பகுதியில் பலத்த சத்தத்துடன் மர்ம பொருள் தாக்கியதாகவும் இதில் காரில் இருந்து புகை கிளம்பினாலும் கார் பாதுகாப்பான இடத்திற்கு ஓட்டிச்செல்லப்பட்டதாகவும் இந்த சம்பவத்தில் ரஷ்ய அதிபர் புதினுக்கு எந்த சிறு பாதிப்பும் ஏற்படவில்லை” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6-வது முறை தாக்குதல் முயற்சி
இந்த தாக்குதல் முயற்சி தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனினும் புதின் மீதான இந்த தாக்குதல் முயற்சி எப்போது நடைபெற்றது என்ற விவரம் எதுவும் வெளியிடப்படவில்லை. ஏற்கனவே 5 முறை கொலை முயற்சியில் இருந்து தப்பித்து இருப்பதாக புதின் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளிப்படையாக அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் தற்போது 6-வது முறையாக புதின் மீது தாக்குதல் முயற்சி நடைபெற்றதா என்ற கேள்வியும் எழாமலும் இல்லை.
தேசத்துரோக வழக்கு
உக்ரைன் உடனான போரில் பின்னடைவு மற்றும் மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடைகளால் உள்நாட்டில் புதின் கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக ரஷ்யாவில் உள்ள முக்கிய எதிர்க்கட்சிகள் தரப்பில் இருந்து, புதினை தேசத்துரோக வழக்கில் கைது செய்ய வேண்டும் என்றும், அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் எனவும் குரல்கள் வலுத்துள்ளன. புதின் ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி 65-க்கும் மேற்பட்ட முனிஷிபல் பிரதிநிதிகள் கையெழுத்திட்டு கோரிக்கை மனுவை அளித்து இருப்பதாகவும் உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் தரப்பில் தெரிவிக்கும் தகவலாக உள்ளது.