ரி20 தரவரிசையில் முன்னேறிய வனிந்து ஹசரங்க, பானுக ராஜபக்ச

சர்வதேச கிரிக்கெட் பேரவை நேற்று (14) வெளியிட்டுள்ள புதிய ரி 20 தரவரிசையில், இலங்கை அணியின் சகலதுறை வீரர் வனிந்து ஹசரங்க மற்றும் பானுக ராஜபக்ச ஆகிய இருவரும் முன்னேற்றம் கண்டுள்ளனர்.

இதன்படி, ரி20 பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் வனிந்து ஹசரங்க 6ஆவது இடத்தையும், ரி20 துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் பானுக ராஜபக்ச 33ஆவது இடத்தையும் பெற்றுள்ளனர்.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற 15ஆவது ஆசியக் வெற்றிக்கிண்ண தொடர் நிறைவுக்கு வந்துள்ள நிலையில், சர்வதேச கிரிக்கெட் பேரவையானது குறித்த தொடரில் சிறந்த வீரர்களை உள்ளடக்கிய புதிய ரி20 வீரர்களுக்கான தரவரிசையை வெளியிட்டுள்ளது.

இதன்படி, இம்முறை ஆசியக் கிண்ணத்தில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களில் 2ஆவது இடத்தைப் பிடித்த இலங்கை அணியின் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளரான வனிந்து ஹஸரங்க, ரி20 பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் 3 இடங்கள் முன்னேறி தற்போது 6ஆவது இடத்தையும், ரி20 சகலதுறை வீரர்கள் தரவரிசையில் 7 இடங்கள் முன்னேறி 4ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.

இதேவேளை, இலங்கை அணியின் மற்றொரு சுழல் பந்துவீச்சாளரான மஹீஷ் தீக்ஷன தொடர்ந்து 8ஆவது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார்.

அத்துடன், ஆசியக் கிண்ணத் தொடரில் துடுப்பாட்டத்தில் திறமைகளை வெளிப்படுத்தி அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்களில் 4ஆவது இடத்தைப் பிடித்த இலங்கை அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரரான பானுக ராஜபக்ச, ரி20 துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் 34 இடங்கள் முன்னேறி தற்போது 34ஆவது இடத்தில் காணப்படுகின்றார்.

இம்முறை ஆசியக் கிண்ணத்தில் 191 ஓட்டங்களைக் குவித்த அவர், பாகிஸ்தான் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் 71 ஓட்டங்களைக் குவித்து இலங்கை அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்ததுடன், இறுதிப் போட்டியின் ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.

இந்நிலையில், ரி20 துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் முதல் 10 இடங்களில் உள்ள ஒரே ஒரு இலங்கை வீரராக பெதும் நிஸ்ஸங்க காணப்படுகின்றார். இம்முறை ஆசியக் கிண்ணத்தில் 2 அரைச் சதங்களை பெற்று 173 ஓட்டங்களைக் குவித்த அவர், ரி20 தரவரிசையில் 8ஆவது இடத்தில் உள்ளார். முன்னதாக ஆசியக் கிண்ண இறுதிப் போட்டிக்கு முன் பெதும் நிஸ்ஸங்க 7ஆவது இடத்தில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.