புதுடெல்லி: இந்தியாவில் இணையதளத்தை அடிப்படையாக கொண்ட ஸ்மார்ட்போன் பயன்பாடும், அதன் வழியாக வங்கி சார்ந்த பணப் பரிமாற்றங்கள், இணையதள வர்த்தகம் உள்ளிட்டவை செய்யப்படுவதும் அதிவேகமாக வளர்ந்து வருகின்றன. நவீனமயத்தின் ஒரு பகுதியாக இதை பார்த்தாலும், இதன் மூலம் ஆபத்துகளும் உள்ளன. இது, இந்தியாவை சைபர் தாக்குதல்கள் பெருமளவில் நடக்க வாய்ப்புள்ள ஒரு நாடாக மாற்றியுள்ளது. தற்போது சோவா என்ற வைரஸ் மூலம் இந்திய வங்கிகளுக்கு சைபர் குற்றவாளிகள் குறி வைத்துள்ளனர். அமெரிக்கா, ரஷ்யா, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் சோவா வைரஸ் மூலம் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அதை தொடர்ந்து தற்போது இந்தியா உள்ளிட்ட சில நாடுகளை இவர்கள் குறி வைத்துள்ளனர். சோவா வைரசின் மூலம் ஆன்ட்ராய்ட் போன்களில் முக்கிய தகவல்களை திருடி விடுவர். குறிப்பாக வங்கி கணக்கு எண், வங்கியில் பணம் இருப்பு போன்றவற்றை ரகசிய திருடி விடுவர். அதன்மூலம், உங்கள் வங்கி கணக்கில் உள்ள பணமும் களவாடப்படும். சோவா வைரஸ் வங்கி செயலிகள் உள்பட 200க்கும் மேற்பட்ட செயலிகளை குறிவைத்துள்ளது என்று இந்தியன் கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம்(சிஇஆர்டி-இன்) தெரிவித்துள்ளது.