வெந்து தணிந்தது காடு படம் எப்படி இருக்கு? திரைவிமர்சனம்!

கௌதம் மேனன் சிம்பு மற்றும் ஏ ஆர் ரகுமான் கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகி உள்ளது வெந்து தணிந்தது காடு. மாநாடு படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து இந்த படத்தில் சிம்பு நடிக்கிறார் என்ற தகவல் வெளியானதிலிருந்து இப்படத்தின் மீதுதான் எதிர்பார்ப்பு அதிக அளவில் இருந்தது. வெந்து தணிந்தது காடு படம் ஒரு நாவலை மையப்படுத்தி உருவாகிறது என்பதால் எதிர்பார்ப்பு இன்னும் அதிக அளவில் இருந்தது. இந்த படத்தில் இருந்து வெளியான போஸ்டர்கள் மற்றும் பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய ஹிட் அடித்து இருந்தது, இந்நிலையில் இந்த படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

தூத்துக்குடி பகுதிகளில் இருக்கும் எந்த ஒரு வசதியும் இல்லாத சிறு கிராமத்தில் தனது தாய் ராதிகா மற்றும் தனது தங்கையுடன் சிம்பு சிறுவயது இளைஞனாக வாழ்ந்து வருகிறார். அங்கு ஏற்படும் ஒரு சிறிய விபத்தின் காரணமாக அங்கிருந்து மும்பைக்கு வேலைக்கு செல்கிறார்.  வேலைக்கு சேரும் இடத்தில் ஏற்படும் சில பிரச்சனைகளினால் சிம்புவின் வாழ்க்கை தடம் மாறி எப்படி கேங்ஸ்டர் ஆக உருமாறுகிறார் என்பதே வெந்து தணிந்தது காடு படத்தின் கதை.  படம் வெளியாவதற்கு முன்பு இயக்குனர் கௌதம் மேனன் அதிகாலை காட்சி பார்க்கும் ரசிகர்கள் அனைவரையும் இரவு நன்கு தூங்கி விட்டு வர சொன்னார்.  ஏனெனில் படம் செட் ஆவதற்கு சிறிது காலம் எடுக்கும் என்பதால் அவ்வாறு கூறியிருந்தார். அவர் சொன்னது போலவே படம் ரொம்பவும் மெதுவாகவே நகர்கிறது. 

முதல் பாதி முழுக்கவே சிம்புவின் வாழ்க்கையை மிகவும் எதார்த்தமாகவும் அழகாகவும் காட்டியிருக்கிறார் இயக்குனர் கௌதம் மேனன். ஒரு சாதாரண இளைஞன் தன் சொந்த ஊரிலிருந்து வேறு ஒரு மாநிலத்திற்கு வேலைக்கு சென்றால் எப்படி இருப்பானோ, அதை அப்படியே திரையில் காட்டியிருக்கிறார்.  உடல் எடையை அதிகரித்து நடப்பதற்கு சிரமப்பட்ட சிம்பு, ஒரு 21 வயது இளைஞனாக நம்மை நம்ப வைக்கிறார்.  அவரது எதார்த்தமான நடிப்பு முத்து என்ற கதாபாத்திரத்திற்கு கூடுதல் வலு சேர்க்கிறது. முதல் பாதி முழுக்கவே தனது பேச்சு மற்றும் உடல் மொழியில் அசத்தியிருக்கிறார். கதாநாயகியாக வரும் சித்திக்கு முதல் பாதையில் பெரிய வேலை எதுவுமில்லை என்றாலும் கதைக்கு முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் இருக்கிறார். அம்மாவாக வரும் ராதிகா சில காட்சிகளே என்றாலும் தன் வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.  முதல் பாதையின் முடிவில் தொடங்கு அதிரடி கிளைமாக்ஸ் வரை செல்கிறது.  

முதல் பாதி எந்த அளவிற்கு மெதுவாக சென்றதோ இரண்டாம் பாத்தே அதே அளவிற்கு வேகமாக செல்கிறது. கௌதம் மேனனா இப்படி ஒரு படத்தை எடுத்திருக்கிறார் என்று அனைவரும் ஆச்சரியப்படும் அளவிற்கு வெந்து தணிந்தது காடு உள்ளது.  ஏஆர் ரகுமானின் இசையில் பாடல்கள் அனைத்தும் ஹிட்டானது போலவே பிஜிஎம்-மிலும் தெறிக்கவிட்டு இருக்கிறார். முக்கியமான காட்சிகளில் அவரது பின்னணி இசை படத்திற்கு கூடுதல் வலு சேர்கிறது.  பொதுவாக கௌதம் மேனின் படங்களில் உள்ள பிரச்சனை இந்த படத்திலும் தொற்றி கொள்கிறது. நன்றாக சென்று கொண்டிருக்கும் கதையில் தேவையில்லாமல் படத்திற்கு சம்பந்தமே இல்லாமல் சில கிளைமாக்ஸ் காட்சிகள் வரும், அது போலவே இந்த படத்திலும் ஒரு கிளைமாக்ஸ் காட்சி வருகிறது. இரண்டாம் பகுதி எடுக்க வேண்டும் என்பதற்காகவே திணிக்கப்பட்டது போல் உள்ளது இந்த கிளைமாக்ஸ்.  சிலருக்கு இப்படம் மிகவும் மெதுவாக செல்வது போல் இருக்கும், ஒரு சிலருக்கு அதுவும் பிடித்து போகலாம்.  வெந்து தணிந்தது காடு கிளைமாக்ஸுக்கு வணக்கத்தை போடு.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.